உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி


உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி
x
தினத்தந்தி 6 March 2018 11:00 PM GMT (Updated: 6 March 2018 8:20 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.

ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் மற்றும் சூப்பர்-6 சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

ஹராரே நகரில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 123 ரன்களும் (91 பந்து, 7 பவுண்டரி, 11 சிக்சர்), சிம்ரோன் ஹெடிம்யேர் 127 ரன்களும் (93 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகத்தால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமீரக அணியில் ரமீஸ் ஷாசாத் 112 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ( பி பிரிவு) ஹாங்காங்கை 91 ரன்களில் சுருட்டிய ஸ்காட்லாந்து அணி அந்த இலக்கை 23.3 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

இன்னொரு ஆட்டத்தில் அயர்லாந்து-பப்புவா நியூ கினியா (ஏ பிரிவு) அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா 50 ஓவர்களில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் டோனி உரா (151 ரன், 142 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) தவிர மற்ற யாரும் சோபிக்கவில்லை. அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்டுவின் (111 ரன்) சதத்தின் உதவியுடன் 49.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை சுவைத்தது.

புலவாயோ நகரில் நடந்த பரபரப்பான ஆட்டம் ஒன்றில் (பி பிரிவு) ஜிம்பாப்வே அணி 2 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 43 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான், ரஷித்கான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து களம் புகுந்த ஆப்கானிஸ்தான் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 163 ரன்களுடன் (36 ஓவர்) சுலபமாக வெற்றி பெறும் நிலையிலேயே காணப்பட்டது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஷிகந்தர் ராசா ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை கபளகரம் செய்து திருப்பத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அரைசதத்துடன் (60 ரன்), 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஷிகந்தர் ராசா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வேக்கு இது 2-வது வெற்றியாகும். அதே சமயம் 2-வது தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர் சிக்ஸ் சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

சதம் அடித்து கெய்ல் சாதனை

* வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்துள்ளார். அவரது 23-வது சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக சதங்கள் நொறுக்கியவர்களின் பட்டியலில் கெய்ல் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை அந்த இடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (22 சதம்) 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

* ஒரு நாள் போட்டியில் அதிக வயதில் சதத்தை ருசித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சிறப்பை கெய்ல் பெற்றுள்ளார். கெய்லின் தற்போதைய வயது 38 ஆண்டு 166 நாட்கள். இதற்கு முன்பு தேஸ்மான்ட் ஹெய்ன்ஸ் (38 ஆண்டு 18 நாள்) இந்த பெருமையை தக்கவைத்திருந்தார்.

Next Story