முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் இந்தியஅணி தோல்வி


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் இந்தியஅணி தோல்வி
x
தினத்தந்தி 6 March 2018 11:30 PM GMT (Updated: 6 March 2018 8:46 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் இந்தியஅணி இலங்கை அணியிடம் வீழ்ந்தது.

கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

நேற்று தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதின.

முன்னதாக இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. கொழும்பு நகரில் எந்தவித பிரச்சினையும் இல்லை, அதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே இந்த ஆட்டம் நடந்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் சன்டிமால், இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா (0) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் (1 ரன்) சொதப்பினார். நுவான் பிரதீப் புல்டாசாக வீசிய பந்தை விலகிய நிலையில் அடிக்க முயற்சித்த போது ‘கிளன் போல்டு’ ஆனார்.

இதன் பின்னர் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறிது நேர மந்தமான பேட்டிங்குக்கு பிறகு ஆட்டம் ஓரளவு சூடுபிடித்தது. நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் தவான் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டினார். 12 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது. மனிஷ் பாண்டே தனது பங்குக்கு 37 ரன்கள் (35 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் வெளியேறினார். மறுமுனையில் சதத்தை நோக்கி வீறுநடை போட்ட தவான் துரதிர்ஷ்டவசமாக 90 ரன்களில் ( 49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இறுதி கட்டத்தில் ரிஷாப் பான்ட் (23 ரன்), தினேஷ் கார்த்திக் (13 ரன், 6 பந்து, 2 பவுண்டரி, நாட்-அவுட்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 175 ரன்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் குசல் மென்டிஸ் 11 ரன்களில், வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு புகுந்த குசல் பெரேரா, இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக ஷர்துல் தாகூர் வீசிய ஒரு ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். ‘நோ-பால்’ வகையில் எக்ஸ்டிரா ஒன்றும் சேர்ந்ததால் அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் அவர்களுக்கு கிட்டியது.

தொடர்ந்து அதிரடி நீடித்ததால் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் மட்டும் இலங்கை 75 ரன்கள் சேகரித்தது. பவர்-பிளேயில் இலங்கை திரட்டிய அதிகபட்ச ரன்கள் இது தான். இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய குசல் பெரேரா 66 ரன்களில் (37 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அந்த அணி மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், தடையின்றி வெற்றிப்பாதையை அடைந்தது.

இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷனகா 15 ரன்களுடனும், திசரா பெரேரா 22 ரன்களுடனும் (10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 7 தோல்விக்கு பிறகு இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இந்த ஆட்டத்தில் திருநெல்வேலியில் பிறந்தவரான ஆல்-ரவுண்டர் விஜய்சங்கர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் களம் இறங்கினர். இவர்கள் மூன்று பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் நாளை (வியாழக்கிழமை) சந்திக்கின்றன.

Next Story