கிரிக்கெட்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல் + "||" + World Cup triumph over Bangladesh

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்.
கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடக்கும் 2-வது லீக்கில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க முடியும் என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் குவித்த போதிலும், குசல் பெரேராவின் (37 பந்தில் 66 ரன்) அதிரடியின் உதவியுடன் இலங்கை அணி வெற்றிக்கனியை பறித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஒரே ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கியதே நமது அணிக்கு பாதகமாக அமைந்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

வங்காளதேச அணியில் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் காயத்தால் கடைசி நேரத்தில் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகும். ஆனாலும் அந்த அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதனால் வங்காளதேச வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம். இவ்விரு அணிகள் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட், விஜய்சங்கர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவும்யா சர்கார், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், சபிர் ரகுமான், முஸ்தாபிஜூர் ரகுமான், ருபெல் ஹூசைன், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன், ருபெல் ஹூசைன்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.