வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி
x
தினத்தந்தி 8 March 2018 11:30 PM GMT (Updated: 9 March 2018 12:37 AM GMT)

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற்றது.

கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 2-வது லீக்கில் இந்தியா-வங்காளதேச அணிகள் சந்தித்தன. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசத்துக்கு இந்திய பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் சவும்யா சர்கார் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் தூக்கியடித்த பந்தை கேட்ச் செய்ய வாஷிங்டன் சுந்தரும், மனிஷ் பாண்டேவும் ஓடி வந்தனர். அருகில் வந்ததும், ‘அவர் பிடிப்பார் என்றும் இவரும், இவர் பிடிப்பார் என்று அவரும் நினைத்து முயற்சிக்காமல் நின்றனர். அதற்குள் பந்து கீழே விழுந்துவிட்டது. ஆனாலும் சவும்யா சர்கார் (14 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்காளதேச அணியினர், அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியதால் ரன்ரேட் பெரிய அளவில் செல்லவில்லை. அபாயகரமான பேட்ஸ்மேன்களான தமிம் இக்பால் 15 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 18 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 34 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீரர்கள் பீல்டிங்கில் 3 கேட்ச்சுகளை கோட்டை விட்டனர். பந்து வீச்சை போல் பீல்டிங்கிலும் இறுக்கியிருந்தால் எதிரணியின் ஸ்கோர் இதைவிட குறைந்திருக்கும். இந்திய தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேகரித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது. ஷிகர் தவான் 55 ரன்களும் (43 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ் ரெய்னா 28 ரன்களும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை நடக்கும் அடுத்த ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

Next Story