மனைவி புகாரின் பேரில் முகமது ஷமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு


மனைவி புகாரின் பேரில் முகமது ஷமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு
x
தினத்தந்தி 9 March 2018 10:45 PM GMT (Updated: 9 March 2018 8:16 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கொலைமுயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #MohammedShami

கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கொலைமுயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது காதல் மனைவி ஹசின் ஜஹன் சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான புகார் தெரிவித்து இருந்தார். அதில் ‘முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருவதாகவும், கொலை செய்ய கூட முயற்சி செய்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் முகமது ஷமி பல பெண்களுடன் தகாத உறவு வைத்து கொண்டு தன்னை அடிக்கடி துன்புறுத்துகிறார்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஷமி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பல பெண்களுடன் கிளுகிளுப்பாக உரையாடியதையும் சமூக வலைதளத்தில் அவர் அம்பலப்படுத்தினார்.

தன் மீதான புகாரை முகமது ஷமி முழுமையாக மறுத்தார். அத்துடன், ‘தனக்கு எதிரான புகாருக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க சதி நடக்கிறது. எனது மனைவியை யாரோ தவறுதலாக வழிநடத்துகிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் எல்லாம் சரியாகி விடும்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் போலீசில் முகமது ஷமி மீது ஹசின் ஜஹன் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர். புகார் குறித்து ஆய்வு செய்த போலீசார் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘கொலை முயற்சி, பெண்ணை கொடுமைப்படுத்துதல், பலாத்காரம், கிரிமினல் குற்றம், காயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதில் சில பிரிவுகள் முன்ஜாமீன் பெற முடியாததாகும். இதனால் முகமது ஷமி மற்றும் அவருடைய உறவினர்களுக்கு பெருத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முகமது ஷமி மீது புகார் தெரிவித்ததை அடுத்து தான் குடியிருக்கும் வீட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் நடமாடுவதாகவும், தனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஹசின் ஜஹன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story