“பாண்ட்யாவுடன் என்னை ஒப்பிட்டு நெருக்கடியை உருவாக்காதீர்” தமிழக வீரர் விஜய் சங்கர் பேட்டி


“பாண்ட்யாவுடன் என்னை ஒப்பிட்டு நெருக்கடியை உருவாக்காதீர்” தமிழக வீரர் விஜய் சங்கர் பேட்டி
x
தினத்தந்தி 9 March 2018 11:15 PM GMT (Updated: 9 March 2018 8:21 PM GMT)

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் என்னை ஒப்பிட்டு நெருக்கடியை உருவாக்காதீர் என்று மற்றொரு இந்திய ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் கூறியுள்ளார். #VijaySankar

கொழும்பு, 

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் என்னை ஒப்பிட்டு நெருக்கடியை உருவாக்காதீர் என்று மற்றொரு இந்திய ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை இந்திய அணி 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 55 ரன்களும், சுரேஷ் ரெய்னா 28 ரன்களும் விளாசினர்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இது ஒரு முழுமையான, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. பந்து வீச்சாளர்கள் தங்களது வியூகங்களை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தினர். ஆனால் பீல்டிங்கில் குறிப்பாக கேட்ச் செய்வதில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்த பீல்டிங் அணியாக இருக்க விரும்புகிறோம். இந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை மறுபடியும் செய்யமாட்டோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா கூறுகையில், ‘எங்களது பேட்டிங் சரியில்லை. 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் சீராக எடுப்பது அவசியம். ரன் எடுக்காமல் பந்தை விரயம் ஆக்கியதால் அதிகமான நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் ஒரு வெற்றி கிடைத்தால் போதும். எங்களுக்கு உத்வேகம் வந்து விடும்’ என்றார்.

முஷ்பிகுர் ரஹிம் (18 ரன்), மக்முதுல்லா (1 ரன்) ஆகிய இரு முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் விஜய் சங்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த 27 வயதான விஜய் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது. அப்படி இருக்கும் போது ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் என்னை ஒப்பிட்டால் எனக்கு தேவையில்லாத நெருக்கடித் தான் உருவாகும். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஒப்பிட்டு பார்ப்பதை விரும்புவதில்லை. நானும் அப்படி தான். நம்மை நெருக்கடிக்குள்ளாக்குவதை விட, களத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டுவதே அணிக்கு முக்கியமானது.

எனது பந்து வீச்சில் சில கேட்சுகள் நழுவிப்போனதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் கேட்சுகள் தவறிப்போவது விளையாட்டின் ஒரு பகுதி. ஆனாலும் அந்த சமயத்தில் எனது முதல் சர்வதேச விக்கெட்டை கைப்பற்றுவதற்கு மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக மின்னொளியின் கீழ் அதுவும் வெள்ளைப்பந்தை கேட்ச் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதை அறிவேன். அதனால் கேட்ச் போய் விட்டதே என்று கவலைப்பட்டு கொண்டிருக்கவில்லை. உடனடியாக அடுத்த பந்துவீச்சு மீது கவனம் செலுத்தினேன்.

நான் மிகவும் தீவிரத்துடன் கடினமாக உழைத்து இருக்கிறேன். அதற்குரிய பலன் கிடைத்துள்ளது. இது, எனக்கு ஒரு தொடக்கம் தான். ஒரு கிரிக்கெட் வீரராக தொடர்ந்து ஆட்டத்தை மேம்படுத்துவதும், கற்றுக்கொள்வதும் அவசியமாகும். அடுத்து வரும் போட்டிகளிலும் முழு திறமையை வெளிப்படுத்த ஆவல் கொண்டுள்ளேன்.

நெருக்கடி என்பது கிரிக்கெட்டில் எப்போதும் இருக்கத்தான் செய்யும். நெருக்கடியை அனுபவித்து ஆடினால் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் நெருக்கடியை உள்வாங்கி கொண்டால், ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு விஜய் சங்கர் கூறினார்.

Next Story