தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவுக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை


தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவுக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை
x
தினத்தந்தி 13 March 2018 12:45 AM GMT (Updated: 12 March 2018 9:08 PM GMT)

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் விக்கெட்டை வீழ்த்திய ரபடா அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் கொண்டாடியதும் புகாரின் அடிப்படையில் ஐ சி சி ரபடாவுக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.

போர்ட் எலிசபெத்,

போர்ட் எலிசபெத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (25 ரன்), வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். விக்கெட்டை வீழ்த்தியதும் மகிழ்ச்சியில் கத்திய ரபடா, அப்பீல் செய்யலாமா என்று யோசித்தபடி நடந்த ஸ்டீவன் சுமித்தின் தோள்பட்டையிலும் இடித்தார். இது நடத்தை விதிமீறல் என்பதால் அவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) லெவல்-2 பிரிவின் கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தது. இது குறித்து ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் விசாரணை நடத்தினார். 

விசாரணை முடிவில் ரபடாவுக்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டி தொடரில் ஆட முடியாது. அத்துடன் அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. கடந்த 24 மாதத்தில் ரபடா நடத்தை விதிமுறையை மீறியது 2-வது முறையாகும். கடந்த சீசனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பென் ஸ்டோக்சுடன் தகராறு செய்து இருந்தார். அத்துடன் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்திய ரபடா அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் கொண்டாடியதும் புகாருக்கு உள்ளானது. இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், தகுதி இழப்பு புள்ளியும் பெற்றார். தனது விக்கெட்டை வீழ்த்திய ரபடாவை திட்டிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ்க்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.




Next Story