கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி ஆட்டம்: வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி + "||" + West Indies and Ireland qualify for the 'Super Six' round

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி ஆட்டம்: வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி ஆட்டம்: வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி
உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் வெற்றி பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின.
ஹராரே,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் டாப்-8 இடங்களை வகித்த தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றன.

எஞ்சிய இரு அணிகள் எது? என்பதை நிர்ணயிப்பதற்கான உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் கடந்த 4-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழையும். சூப்பர் சிக்ஸ் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

இதில் ஹராரேயில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் வெஸ்ட்இண்டீஸ்-நெதர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த நெதர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியதால் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இவின் லீவிஸ் 84 ரன்னும், சாமுவேல்ஸ் ஆட்டம் இழக்காமல் 73 ரன்னும், ரோவ்மன் பவெல் 52 ரன்னும், கிறிஸ் கெய்ல் 46 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 28.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி அப்போது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 222 ரன்கள் தேவையானதாக இருந்தது. ஆனால் அந்த அணி 167 ரன்களே எடுத்து இருந்ததால் வெஸ்ட்இண்டீஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து ஆட்டம் ‘டை’

இதேபிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து-ஐக்கிய அரபு அமீரக அணிகள் சந்தித்தன. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 126 ரன்னும், கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்டு 92 ரன்னும் சேர்த்தனர். பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 44 ஓவர்களில் 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 29.3 ஓவர்களில் 91 ரன்னில் சுருண்டது. இதனால் அயர்லாந்து அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புலவாயோவில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 46.4 ஓவர்களில் 210 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 49.1 ஓவர்களில் 210 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் திரில்லிங்கான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதேபிரிவில் இன்னொரு லீக் ஆட்டத்தில் நேபாள அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை தோற்கடித்தது. முதலில் ஆடிய ஹாங்காங் அணி 48.2 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய நேபாள அணி 40.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

சூப்பர் சிக்ஸ் சுற்று அணிகள்

லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் 4 வெற்றிகள் பெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணி (8 புள்ளிகள்) முதலிடமும், 3 வெற்றி, ஒரு தோல்வி கண்ட அயர்லாந்து அணி (6 புள்ளிகள்) 2-வது இடமும், 2 வெற்றி, 3 தோல்வி கண்ட ஐக்கிய அரபு அமீரக அணி (4 புள்ளிகள்) 3-வது இடமும் பெற்று ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின. நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் முறையே 4-வது, 5-வது இடம் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் 3 வெற்றி, ஒரு டையுடன் 7 புள்ளிகள் குவித்து முறையே முதல் 2 இடங்களுடனும், ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளிகள்) 3-வது இடமும் பிடித்து ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்குள் நுழைந்தன. நேபாளம், ஹாங்காங் அணிகள் முறையே 4-வது, 5-வது இடம் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தன. சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் 15-ந் தேதி தொடங்குகிறது.