கிரிக்கெட்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மீண்டும் மோதல் + "||" + Triangular 20 Over cricket Series : India-Bangladesh clash again today

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மீண்டும் மோதல்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மீண்டும் மோதல்
மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன.
கொழும்பு, 


20 ஓவர் கிரிக்கெட் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை 139 ரன்னுக்குள் சுருட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பதம் பார்த்த இந்திய அணி, மறுபடியும் இலங்கையுடன் மோதிய போது அதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம்

4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி இன்று தனது கடைசி லீக்கில் வங்காளதேசத்துடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் இந்தியா சிக்கலின்றி இறுதிப்போட்டியை எட்டிவிடலாம். மாறாக தோற்றால் அடுத்த போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். இதனால் இந்திய வீரர்கள் அதிக விழிப்புடன் ஆடுவார்கள் என்று நம்பலாம். முக்கியமான போட்டி என்பதால் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றாலும் அடுத்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 215 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்து வரலாறு படைத்தது. இதனால் அந்த அணி வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால், லிட்டான் தாஸ் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பியுள்ளது.

வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா கூறுகையில், ‘இந்திய பவுலர்கள் தங்களது வேகத்தில் நிறைய மாற்றம் செய்து வீசுகிறார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த யுக்தியை கடைபிடிக்கிறார்கள். இதில் நாங்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்’ என்றார். இதுவரை நடந்த அனைத்து ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய மோதலிலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

மழையால் பாதிக்குமா?

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. கொழும்பில் இன்று மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம்.