இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு


இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு
x
தினத்தந்தி 13 March 2018 11:00 PM GMT (Updated: 13 March 2018 8:48 PM GMT)

இலங்கையை வீழ்த்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார்.

கொழும்பு, 

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. மழையால் பாதிக்கப்பட்டு 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த மோதலில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி 85 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய போதிலும் மனிஷ் பாண்டேவும் (42 ரன்), தினேஷ் கார்த்திக்கும் (39 ரன்) நிலைத்து நின்று விளையாடி 17.3 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்தனர்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘எங்களது பந்து வீச்சாளர்களிடம் இருந்து சாதுர்யமான ஒரு செயல்பாடு வெளிப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட இலங்கை அணியை இத்தனை ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சியாகும். சீதோஷ்ண நிலையும் எளிதாக இல்லை. பனிப்பொழிவின் தாக்கம் காணப்பட்டது. ஆனாலும் பந்து வீச்சாளர்கள் திட்டமிடலை களத்தில் திறம்பட செயல்படுத்தி அசத்தினர். இதே போல் தினேஷ் கார்த்திக், மனிஷ்பாண்டேவின் பேட்டிங் அருமையாக இருந்தது. மொத்தத்தில் இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. மூன்று அணிகளுமே இறுதிசுற்று வாய்ப்பில் நீடிப்பதால், தொடர்ந்து இதே உத்வேகத்துடன் ஆடுவது அவசியமாகும்’ என்றார்.

இலங்கை கேப்டன் திசரா பெரேரா கூறுகையில், ‘எங்களுக்கு தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் மிடில் வரிசையில் சொதப்பி விட்டோம். 175 முதல் 180 ரன்கள் வரை எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். நிச்சயம் அதில் எங்களது 100 சதவீத திறமையை வெளிக்காட்டுவோம்’ என்றார்.

4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘ஆட்டநாயகன் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணிக்காக வெற்றியை தேடித்தர வேண்டும் என்ற கனவு நனவாகி உள்ளது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் போது, அந்த இடத்தை நான் நிரப்பும் வகையில் பொறுப்புடன் ஆட வேண்டும். ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் இதை செய்திருக்கிறேன். தேசிய அணியிலும் இதை எப்போதும் செய்ய தயாராக உள்ளேன். என்னை பொறுத்தவரை சவால்களை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.

Next Story