கிரிக்கெட்

வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி + "||" + India vs Bangladesh 2018, Nidahas Trophy: India win by 17 runs, enter final

வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

வங்காளதேசத்தை வீழ்த்தி  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. #INDvsBAN
கொழும்பு,

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இலங்கையிடம் தோல்வி அடைந்து பின் வங்காளதேசம் மற்றும் மறுபடியும் இலங்கை அணியை வெற்றி கொண்ட இந்திய அணி தனது கடைசி லீக்கில் வங்காளதேசத்துடன் வெற்றி பெற்றால் சிக்கலின்றி இறுதிப்போட்டியை எட்டிவிடலாம் என்ற நிலையில் இருந்தது. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி  முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி இந்திய அனி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 9.5 வது ஓவரில் 70 ரன்களுடன் விளையாடிய போது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 35 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இருவரும் சிறப்பான கூட்டணியை அமைத்து விளையாடினர். ரோகித் சர்மா நேர்த்தியான ஆட்டம் மூலம் இந்திய அணியின் ரன் கணக்கை முன்நோக்கி எடுத்துச் சென்றார். ரெய்னாவும் இந்த போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் கடைசி ஓவரின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து 47 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்தி களமிறங்கி ரோகித் சர்மாவுடன் விளையாடினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா ரன் அவுட் ஆனார். ரோகித் சர்மா 84 ரன்கள் எடுத்து இருந்தார். தினேஷ் கார்த்தி 2 ரன்களுடன் களத்தில் நின்றார். 

வங்காளதேச அணியில் ருபேல் ஹூசைன் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.  இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்த நிலையில் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது.  தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ் 7 ரன்களும் , தமிம் இக்பால் 27 ரன்களும்  எடுத்தனர். வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி ஓவரில் வங்காளதேச அணி வெற்றி பெற 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது சிராஜ் பந்து வீச்சில் வெறும் 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் வங்காளதேச அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்களே எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 72 ரன்கள் (55 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். மேலும் இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை தட்டிச்சென்றார். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வரும் மார்ச் 18ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.