கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்திஇறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி + "||" + In trilogy cricket The Indian team entered the final

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்திஇறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்திஇறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் இடையே 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மீண்டும் மோதின. இந்திய அணியில் ஜெய்தேவ் உனட்கட் நீக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். வங்காளதேச அணியில் தஸ்கின் அகமதுவுக்கு பதிலாக அபு ஹைதர் இடம் பெற்றார்.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களம் புகுந்தனர்.

ரெய்னா-ரோகித் கலக்கல்


இருவரும் நல்ல தொடக்கம் தந்த போதிலும் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயரவில்லை. மிதமான போக்கிலேயே நகர்ந்தது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா 49 ரன்கள் சேகரித்தது. ஸ்கோர் 70 ரன்களை எட்டிய போது, ஷிகர் தவான் 35 ரன்களில் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ருபெல் ஹூசைனின் யார்க்கர் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து சுரேஷ் ரெய்னா வந்தார்.

மறுமுனையில் எச்சரிக்கை பாணியை கையாண்ட கேப்டன் ரோகித் சர்மா, 10 ஓவர்களை கடந்ததும் அதிரடியில் தீவிரம் காட்டினார். நஸ்முல் இஸ்லாம் பந்து வீச்சில் ஒரு சிக்சர் தூக்கினார். அதைத் தொடர்ந்து மெஹதி ஹசனின் ஓவரில் ரெய்னா சிக்சரும், பவுண்டரியும் விரட்ட, மந்தமாக இருந்த இந்தியாவின் ரன்ரேட் கொஞ்சம் சூடுபிடித்தது.

18-வது ஓவர் தான் திருப்பு முனை என்று சொல்ல வேண்டும். இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அபுஹைதர் வீசிய அந்த ஓவரில் ரோகித் சர்மா 2 சிக்சரும், ரெய்னா ஒரு சிக்சரும் பறக்க விட்டனர். முஷ்தாபிஜூர் ரகுமானின் அடுத்த ஓவரில் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரி விரட்டி சதத்தை நெருங்கினார். தனது 3-வது சதத்தை எட்டுவதற்கு அவருக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

176 ரன்கள் குவிப்பு

ஆனால் இறுதி ஓவரை கச்சிதமாக வீசிய வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹூசைன், சுரேஷ் ரெய்னாவின் (47 ரன், 30 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை வீழ்த்தியதுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் ரோகித் சர்மா (89 ரன், 61 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய வங்காளதேசத்துக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து ‘செக்’ வைத்து அசத்தினார். அவரது பந்து வீச்சுக்கு லிட்டான் தாஸ் (7 ரன்), சவும்யா சர்கார் (1 ரன்), தமிம் இக்பால் (27 ரன்) ஆகியோர் இரையானார்கள்.

இறுதிப்போட்டியில் இந்தியா

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். அவர் களத்தில் நின்றதால் ஒரு வித பரபரப்பு நிலவிக்கொண்டே இருந்தது. ஆனாலும் இந்திய பவுலர்கள் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் அந்த அணியால் 6 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்களின் பீல்டிங் நேற்று மெச்சும்படி இல்லை. இல்லாவிட்டால் வங்காளதேச அணி இவ்வளவு ஸ்கோர் எடுத்திருக்காது. முஷ்பிகுர் ரஹிம் 72 ரன்களுடன் (55 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த தொடரில் முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்ற ஆட்டமாக இது அமைந்தது.

3-வது வெற்றியை சுவைத்த இந்திய அணி இதன் மூலம் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. நாளை நடைபெறும் கடைசி லீக்கில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.