முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்


முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
x
தினத்தந்தி 15 March 2018 10:30 PM GMT (Updated: 15 March 2018 9:22 PM GMT)

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால சுழற்பந்து வீச்சால் வெற்றி பெற்றோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

கொழும்பு,

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால சுழற்பந்து வீச்சால் வெற்றி பெற்றோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியா வெற்றி


இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றதோடு இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 89 ரன்களும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), சுரேஷ் ரெய்னா 47 ரன்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் கடைசி வரை போராடிய போதிலும் (72 ரன், நாட்-அவுட்) அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

ரோகித் சர்மா கருத்து

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா வெற்றி உற்சாகத்தில் கூறியதாவது:-

‘டாஸ்’ போடுகையில் சொன்னது போல், நான் பார்முக்கு திரும்புவது எனக்கு முக்கியமானதாக இருந்தது. இருப்பினும் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். இறுதி கட்டத்தில் அவர்கள் அபாரமாக பந்து வீசினர். இது வழக்கமான ஆடுகளம் போல் இல்லை. பிட்ச்சில் ‘கிரிப்’ கிடைத்தது போல் பந்து மெதுவாக வந்தது. அதை அடித்து ஆடுவது மிகவும் கடினம். அதனால் தான் சிறிது நேரம் நிலைநிறுத்திக்கொண்டு அதன் பிறகு விளாசுவது என்று முடிவு எடுத்து செயல்பட்டேன். அது மட்டுமின்றி புதியதாக களம் இறங்கும் பேட்ஸ்மேனால் இந்த ஆடுகளத்தில் உடனடியாக அதிரடி காட்டுவது சிரமம் என்பதையும் உணர்ந்திருந்தேன். சுரேஷ் ரெய்னா சூப்பர் பார்மில் இருக்கிறார். நானும், அவரும் அமைத்து தந்த பார்ட்னர்ஷிப் ஸ்கோரை வலுப்படுத்துவதற்கு உதவியது. இறுதிப்போட்டியிலும் அவர் இதே போன்று ஆடுவார் என்று நம்புகிறேன்.

வாஷிங்டன் சுந்தருக்கு புகழாரம்

புதிய பந்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் வாஷிங்டன் சுந்தர் தொடக்கத்திலேயே அற்புதமாக பந்து வீசினார். அவரது மாயாஜால பந்து வீச்சு தான் ஆட்டத்தின் போக்கை எங்கள் பக்கம் திருப்பியது. அவர், என்னிடம் இருந்து பந்தை எடுத்துக் கொண்டு சென்று பந்து வீசும் அளவுக்கு தைரியமானவர். பந்தை மேல்வாக்கில் தூக்கி வீசும் போது, ‘பேட்ஸ்மேன்கள் நொறுக்கி விடுவார்களோ’ என்று ஒரு போதும் பயந்ததில்லை. தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இதனால் எனது பணி எளிமையாகி விடுகிறது.

ஒரு பவுலர், தனது பந்து வீச்சுக்கு எந்த மாதிரியான பீல்டிங் வியூகம் அமைக்க வேண்டும் என்பதை சூழ்நிலைக்கு தகுந்தபடி அறிந்து வைத்திருக்கிறார் என்றால், அது அந்த குறிப்பிட்ட பவுலரை பற்றி நிறைய பேச வைக்கும். அப்படிப்பட்ட ஒரு பவுலர் தான் வாஷிங்டன் சுந்தர். அவருக்கு பாராட்டுகள்.

மற்ற பவுலர்களும் தங்களது திட்டமிடலை களத்தில் சரியாக செயல்படுத்தினர். வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்த போட்டியில் அதிகமான ரன்களை (50 ரன்னுக்கு ஒரு விக்கெட்) விட்டுக்கொடுத்துள்ளார். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. போக போக வலுவான பவுலராக உருவெடுப்பார்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Next Story