முச்சதத்தை தவற விட்ட வாசிம் ஜாபர் விதர்பா அணி 634 ரன்கள் குவிப்பு


முச்சதத்தை தவற விட்ட வாசிம் ஜாபர்  விதர்பா அணி 634 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 16 March 2018 9:31 AM GMT (Updated: 16 March 2018 9:31 AM GMT)

சாதனைக்கு வயது தடையில்லை என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம், வாசிம் ஜாபர்! 40 வயதில் இரட்டை சதம் அடித்து தன் பெயரை பதிய வைத்திருக்கிறார் அழுத்தமாக!

நேற்றைய ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 180 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் குவித்துள்ளது. வாசிம் ஜாபர் 285 ரன்னுடனும் (425 பந்து, 34 பவுண்டரி, ஒரு சிக்சர்), அபூர்வ் வான்கடே 44 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.  இன்று 3-வது நாள் ஆட்டம் ஆட்டம் நடைபெற்றது. இதில்  வாசிம் ஜாபர்  286 ரன்கள்  அடித்தார்.  விதர்பா அணி 4 விக்கெட் இழப்பிற்கு  634 ரன்கள் எடுத்து இருந்தது. 

தனது இரண்டாவது முதல் தரப் போட்டியிலேயே முச்சதம் அடித்து மிரள வைத்த வாசிம் ஜாபர், மும்பை கிரிக்கெட்டின் முன்னாள், முதுகெலும்பு. 18 வருடமாக மும்பைக்கு ஆடி வந்த இந்த முதுகெலும்பு, இப்போது விதர்பா அணிக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. இவர் வந்த பின், விதர்பா ரஞ்சி கோப்பையை கைப்பற்றி முக்கியமான அணியாக மாறியிருக்கிறது.

ரஞ்சி கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை வைத்துள்ள ஜாபர், இப்போது, இரானி கோப்பையில் அதிகப்பட்ச ரன் குவித்துள்ள வீரர் என்ற மைல்கல்லையும் பிடித்திருக்கிறார். அதாவது 286 ரன்கள். இதற்கு முன் இரானி கோப்பையில் தமிழக வீரர் முரளி விஜய் அடித்த 266-தான் அதிகப்பட்ச தனி நபர் சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார். கூடவே, முதல் தர போட்டியில் பதினெட்டாயிரம் ரன்களை கடந்து இன்னொரு சாதனையையும் படைத்திருக்கிறார்.

ஓபனிங் பேட்ஸ்மேனான ஜாபர், இந்திய அணிக்காக 31 டெஸ்டில் விளையாடி 1944 ரன்களை எடுத்துள்ளார். அதிகப்பட்ச ரன்கள் 212. இதில் 5 சதங்களும் 11 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட்டில் இரண்டாயிரமாவது வருடம் தென்னப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய ஜாபர், கடைசியாக ஆடியதும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத்தான். 2008-ல் கான்பூரில் நடந்த டெஸ்ட்தான் ஜாபர் இந்தியாவுக்கு ஆடிய கடைசி டெஸ்ட்.

இந்திய அணியில் அவர் அதிகம் சாதிக்கவில்லை என்றாலும் முதல் தரப்போட்டியில் அவர் முக்கியமான வீரர். 1996-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வரும் ஜாபருக்கு இப்போது வயது 40. இருந்தும் அவரது ஃபார்மும் பிட்னஸும் வியக்க வைக்கிறது என்கிறார்கள், கிரிக்கெட் விமர்சகர்கள்.  இளம் வீரர்களுக்கு இணையாக ரன்கள் குவிக்க வேண்டும் என்கிற அவரது தாகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவர் அணியில் இருந்தால் இளம் வீரர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது  என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

Next Story