இந்தியாவில் பகல்–இரவு டெஸ்ட் போட்டி நடத்த திட்டம்


இந்தியாவில் பகல்–இரவு டெஸ்ட் போட்டி நடத்த திட்டம்
x
தினத்தந்தி 17 March 2018 9:50 PM GMT (Updated: 17 March 2018 9:50 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை நிர்ணய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை நிர்ணய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் வருங்காலத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கும் போட்டிகளின் அட்டவணை பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டில் இந்திய அணி உள்ளூரில் 3 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் மோதுகிறது. இந்த டெஸ்ட் பெங்களூருவில் ஜூன் மாதம் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வந்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் ஐதராபாத்திலும், 2–வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டிலும் நடைபெறுகிறது. இதில் ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டியை பகல்–இரவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்திய அணி பகல்–இரவு டெஸ்டில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் இடையிலான ஒருநாள் போட்டிகள் மும்பை, கவுகாத்தி, கொச்சி, இந்தூர், புனேயிலும், 20 ஓவர் போட்டி கொல்கத்தா, சென்னை, கான்பூரிலும் நடக்கிறது. அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.


Next Story