கிரிக்கெட்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல் + "||" + Triangular 20 Over Cricket: Final match India-Bangladesh conflict today

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
கொழும்பு,

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

இறுதிப்போட்டி

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியாவும் (3 வெற்றி, ஒரு தோல்வி), வங்காளதேசமும் (2 வெற்றி, 2 தோல்வி) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. உள்ளூர் அணியான இலங்கை (ஒரு வெற்றி, 3 தோல்வி) வெளியேற்றப்பட்டது.


இந்த நிலையில் இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதி ஆட்டம் நடக்கிறது. சாம்பியன் கோப்பைக்கு இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் இரண்டு முறையும் (6 விக்கெட் மற்றும் 17 ரன் வித்தியாசம்) வங்காளதேசத்தை பின்னியெடுத்தது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடரில் எல்லா வீரர்களும் ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறார்கள். கூட்டு முயற்சியின் செயல்பாடு, இறுதிப்போட்டியிலும் தொடருவது அவசியமாகும். பார்ம் இன்றி தவித்த கேப்டன் ரோகித் சர்மா முந்தைய ஆட்டத்தில் 89 ரன்கள் குவித்தது மகிழ்ச்சியான விஷயமாகும். இந்த ஆடுகளம் மந்தமான தன்மையுடன் இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

வங்காளதேசம் எப்படி?


கடைசி லீக்கில் சர்ச்சை, வாக்குவாதங்களுக்கு இடையே இலங்கையை வீழ்த்தி புது தெம்பு அடைந்துள்ள வங்காளதேச அணி இறுதிப்போட்டியில் நிச்சயம் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். பேட்ஸ்மேன்கள் தமிம் இக்பால், மக்முதுல்லா, கேப்டன் ஷகிப் அல்-ஹசன், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோர் தான் வங்காளதேச அணியின் தூண்கள் ஆவர். இவர்களின் செயல்பாட்டை பொறுத்தே அந்த அணியின் வெற்றி-தோல்வி அமையும்.

ஒரு காலத்தில் குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட வங்காளதேசம், இப்போது பெரிய அணிகளுக்கு சவால் அளிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. அது மட்டுமின்றி அந்த அணி வீரர்கள், இந்தியாவுடன் மோதுவது என்றால் எப்போதும் வீரியமுடன் மல்லுகட்டி நிற்பார்கள். வெற்றி பெற்றால் கேலி, நையாண்டியுடன் சீண்ட ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் இந்திய அணியினர் மிகுந்த கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் அல்லது ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், லிட்டான் தாஸ், சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், சவும்யா சர்கார், மக்முதுல்லா, ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான், ருபெல் ஹூசைன், நஸ்முல் இஸ்லாம்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.