கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் + "||" + India vs Bangladesh T20 Nidahas Trophy final: Karthik seals the title with last-ball six

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன்

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன்
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற உதவினார்.#NidahasTrophy2018
கொழும்பு,

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. 3.2 வது ஓவரில் 27 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் முதல் விக்கெட்டாக லிட்டான் தாஸை வங்காளதேசம் இழந்தது. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவர் அடித்த ஷாட்டை ரெய்னா பிடித்து வெளியேற்றினார். இதனையடுத்து களமிறங்கிய சபிர் ரகுமான் இந்திய பந்துவீச்சுக்கு சவால் அளிக்கும் விதமாக விளையாடினார். அவருடன் கைகோர்த்தவர்கள் எல்லாம் அவுட் ஆகினாலும் 18.2 வது ஓவர் வரையில் ஆதிக்கம் செலுத்தினார். வங்காளதேச அணிக்கு நம்பிக்கையாக ரன்களை சேர்க்கும் பணியை மேற்கொண்டார். 

18.2 வது ஓவரில் அவரை போல்ட் ஆக்கி வெளியேற்றினார் உனட்கட். மொத்தம் 50 ஓவர்களை எதிர்க்கொண்ட சபிர் ரகுமான் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என மொத்தம் 77 ரன்கள் எடுத்து இருந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது. இந்திய அணியில் உனட்கட் (2 விக்கெட்கள்) மற்றும் சாஹல் (3 விக்கெட்கள்) வங்காளதேசத்தை கட்டுப்படுத்தினர். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோகித் சர்மா, மெஹிதி ஹாசன் வீசிய 2 வது ஓவரில் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 32 ஆக இருந்த போது ஷகிப் வீசிய பந்தில் ஹக்கு விடம் கேட்ச் ஆகிய தவான் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதி போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிருப்தியை ஏற்படுத்தினார். 

பின்னர் களம் இறங்கிய ராகுலும், ரோகித்தும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்நிலையில் ராகுலும் 24 ரன்களில் வெளியேற மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோகித் சர்மா 11.1 ஓவரில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என எல்லோரும் நம்பிய ரோகித் சர்மா 13.2 ஓவரில் நஷ்முல் இஸ்லாம் வீசிய பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 42 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடித்து 56 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் மனிஷ் பாண்டேவுடன் கை கோர்த்த விஜய் சங்கர் பொறுமையான ஆட்டத்தையே வெளிபடுத்தினர். 17 வது ஒவரின் இறுதிப்பந்தில் மனிஷ் பாண்டேவும் 28 ரன்களில் வெளியேற  5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 133 ரன்கள் எடுத்து தடுமாறியது. 

18 வது ஓவரில் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் சிக்சர், அடுத்த இரு பந்துகளில் பவுண்டரியும் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐந்தாவது பந்தில் விஜய் சங்கரும் வெளியேற ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சவுமியா சர்கார் வீசிய கடைசி பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை சாம்பியன் பட்டம் பெற செய்தார். தினேஷ் கார்த்தில் எதிர் கொண்ட 8 பந்தில் 29 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.