கிரிக்கெட்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் + "||" + Triangular 20 Over Cricket: Last ball Beat the Sixer Indian team champion

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றிக்கனியை பறித்தது.
கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றிக்கனியை பறித்தது.

முத்தரப்பு கிரிக்கெட்

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இலங்கை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் பரிதாபமாக நடையை கட்டியது.

இந்த நிலையில் இந்த தொடரில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார்.

மிரட்டிய சுழல்

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் வங்காளதேசத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டான் தாஸ் (11 ரன்) வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சிலும், தமிம் இக்பால் (15 ரன்) யுஸ்வேந்திர சாஹலின் சுழலிலும் ஆட்டம் இழந்தனர். தமிம் இக்பால் தூக்கியடித்த பந்தை ‘லாங் ஆன்’ திசையில் எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் நின்ற ஷர்துல் தாகூர் சூப்பராக பிடித்தார். சவுமியா சர்கார் (1 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (9 ரன்) ஆகியோருக்கும் சாஹல் ‘செக்’ வைத்தார். அப்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களுடன் (10.1 ஓவர்) பரிதவித்தது.

சுழற்பந்து வீச்சில் திணறிய வங்காளதேச பேட்ஸ்மேன்கள், இரு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஓவர்களை வீசி முடித்ததும் சுறுசுறுப்படைந்தனர். ஏனெனில் வேகப்பந்து வீச்சில் எந்த வித நெருக்கடியும் இன்றி சவுகரியமாக அடித்து நொறுக்கினர். குறிப்பாக சபிர் ரகுமான் அதிரடி காட்டி ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினார். விஜய் சங்கரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டார். இதற்கிடையே மக்முதுல்லா(21 ரன்), கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (7 ரன்) ரன்-அவுட் ஆனார்கள்.

வங்காளதேசம் 166 ரன்

சாதுர்யமான ஷாட்டுகள் மூலம் இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய சபிர் ரகுமான் 77 ரன்களில் (50 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) ஜெய்தேவ் உனட்கட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில், மெஹதி ஹசன் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட 18 ரன்கள் திரட்டி, தங்கள் அணி சவாலான ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

ரோகித் சர்மா அரைசதம்

பின்னர் 167 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. ஷிகர் தவான் (10 ரன்), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (0) ஏமாற்றம் அளித்தனர். இதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலுடன் கூட்டணி அமைத்து சரிவை தடுத்து நிறுத்தினார். ரன்ரேட்டையும் துரிதப்படுத்தியதால் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.

ஆனால் லோகேஷ் ராகுலும் (24 ரன், 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரோகித் சர்மாவும் (56 ரன், 42 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) சிறிய இடைவெளியில் வெளியேறியதும் இந்திய அணிக்கு நெருக்கடி உருவானது.

திடீர் சிக்கல்

இதன் பின்னர் மனிஷ் பாண்டேவும், ஆல்-ரவுண்டர் தமிழக வீரர் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். முக்கியமான கட்டத்தில் ஆடிய விஜய் சங்கர் பதற்றத்தில் திகைத்து போனார். கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார். அவர் வீசிய முதல் 4 பந்துகளை விஜய் சங்கர் அப்படியே வீணடித்து கடுப்பேற்றினார். 5-வது பந்தில் ‘லெக்-பை’வகையில் ஒரு ரன் கிடைத்தது. கடைசி பந்தில் மனிஷ் பாண்டே (28 ரன்) கேட்ச் ஆனார். இந்த ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே கிடைத்ததால் இந்திய அணி கரைசேருமா? என்ற கேள்வி எழுந்தது. பாண்டேவுக்கு பிறகு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆட வந்தார்.

‘ஹீரோ’ கார்த்திக்

கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹூசைன் வீசினார். இந்த ஓவரில் அமர்க்களப்படுத்திய தினேஷ் கார்த்திக் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 22 ரன்கள் சேர்த்து நெருக்கடியை வெகுவாக தணித்தார்.

இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை சவுமியா சர்கார் வீசினார். இந்த ஓவரை விஜய் சங்கர் சந்தித்தார். முதல் பந்து வைடாக வீசப்பட மறுபடியும் வீசப்பட்ட முதல் பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்தில் சங்கர் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை சந்தித்த விஜய் சங்கர் பவுண்டரி அடித்து ஆறுதல் அளித்தார். ஆனால் அடுத்த பந்தில் சங்கர் (17 ரன், 19 பந்து) ஆட்டம் இழந்தார்.

இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் கடைசி பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் அதை ‘கவர்’ திசையில் சிக்சருக்கு விரட்டி அடித்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.

இந்தியா சாம்பியன்

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. வியப்புக்குரிய வகையில் ஆடிய தினேஷ் கார்த்திக் 29 ரன்களுடன் (8 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.