கிரிக்கெட்

பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு + "||" + Dinesh Karthik is the best performer in the batting Praise of rohith sharma

பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு

பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு
இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்று கேப்டன் ரோகித்சர்மா பாராட்டினார்.
கொழும்பு,

கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் எந்தவரிசையிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்று கேப்டன் ரோகித்சர்மா பாராட்டினார்.

கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சபீர் ரகுமான் 77 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டும், ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றியை ருசித்தது. கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் அந்த பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் சிக்சர் தூக்கி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய போட்டி தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த இறுதிப்போட்டியில் அவர் ஆடிய விதம் நிறைய நம்பிக்கையை அளிக்கும். மிகவும் முக்கியமானது என்னவென்றால் அவர் தனது திறமை மீது நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறார். எந்த வகையான சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பார். பேட்டிங்கில் முன்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, பின்வரிசையில் ஆடச்சொன்னாலும் சரி, எதற்கும் அவர் தயாராக இருப்பார். இதுபோன்ற வீரர்கள் தான் நமது அணிக்கு தேவை.

நான் அவுட் ஆகி வீரர்கள் இருக்கும் இடத்துக்கு சென்ற போது தினேஷ் கார்த்திக் வருத்தத்தில் இருந்தார். அவரை 6-வது வீரராக களம் இறக்காததால் ஆதங்கத்துடன் காணப்பட்டார். நீங்கள் கடைசியில் களம் இறங்கி ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக முடித்து தர வேண்டும் என விரும்புகிறேன் என்று அவரிடம் நான் சொன்னேன். ஏனெனில் உங்களிடம் உள்ள திறமை கடைசி மூன்று, நான்கு ஓவர்களில் தேவைப்படும் என்றேன். அந்த காரணத்தினால் 13-வது ஓவரில் நான் ஆட்டம் இழக்கும் போது தினேஷ் கார்த்திக் 6-வது வீரராக களம் இறக்கப்படவில்லை. அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும் ஆட்டத்தை முடித்த விதத்தில் அவர் மகிழ்ச்சி அடைந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

வங்காளதேசத்தை பொறுத்தவரை கடைசி ஓவர்களில் அனுபவம் வாய்ந்த ருபெல் ஹூசைன், முஸ்தாபிகுர் ரஹ்மான் ஆகியோர் பந்து வீசுவார்கள் என்பது தெரியும். அதனை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என்பதால் தினேஷ் கார்த்திக் பின்வரிசையில் களம் இறக்கப்பட்டார். வங்காளதேச பந்து வீச்சாளர்களின் ஆப்-கட்டர்களை சிறப்பாக எதிர்கொள்ள அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மட்டுமே சிறந்தவராக தெரிந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போதும், தமிழக அணிக்காக ஆடிய போதிலும் அவரது ஆட்டத்தை பார்த்து இருப்பதால் தான் அந்த முடிவுக்கு வந்தேன்.

இந்த போட்டி தொடர் முழுவதும் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு மாயாஜாலமாக இருந்தது. புதிய பந்தில் அவரின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்தது. பவர்பிளே ஓவரில் அவரை போல் யாரும் இந்த அளவுக்கு எங்களது நெருக்கடியை போக்கி இருக்க முடியாது. அத்துடன் அவர் விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் மறக்க முடியாது. தனது பவர்பிளே ஓவரில் எந்த பேட்ஸ்மேனும் அதிக ரன்கள் எடுக்க முடியாத வகையில் அவர் பந்து வீசினார். அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருப்பதை காண முடிந்தது. இந்த போட்டி தொடர் அவருக்கு அதிக நம்பிக்கை அளித்து இருக்கும். யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சும் நன்றாக இருந்தது.

இந்த போட்டி தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. அணியில் இடம் பிடித்த எல்லா வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். சில வீரர்கள் தேசிய அணிக்காக அதிகம் விளையாடிய அனுபவம் இல்லாத நிலையிலும் சிறப்பாக செயல்பட்டது எளிதான காரியம் அல்ல. இந்த வெற்றி அணிக்கு மேலும் ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளித்து இருக்கிறது. கடைசி பந்தில் நமது அணி வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. ஒரு வேளை கடைசி பந்து பவுண்டரிக்கு சென்று ஆட்டம் ‘டை’ ஆனால் சூப்பர் ஓவருக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருந்ததால் நான் ஓய்வறைக்கு சென்று காலுறை கட்ட தயாரானேன். இதனால் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கியதை நான் நேரில் பார்க்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டி தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியில் இந்திய அணியினர் எங்களை விட நெருக்கடியை சிறப்பாக கையாண்டனர். 18-வது மற்றும் 19-வது ஓவர்களை சிறந்த பவுலர்களை கொண்டு வீச வேண்டும் என்று விரும்பினோம். 19-வது ஓவரில் ருபெல் ஹூசைன் நன்றாக தான் பந்து வீசினார். ஆனால் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். 166 ரன்கள் இலக்கு என்பது வெற்றிக்கு போதுமானது அல்ல என்பது தெரியும். எல்லோரும் முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் இருந்து பல நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இந்த தோல்விக்காக அழ வேண்டியதில்லை. இதுபோன்ற நெருக்கமான பல ஆட்டங்களில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். இதனை மறந்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க வேண்டும். கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் ஆடிய ஷாட் அரிய வகையானதாகும். சில சமயங்களில் இதுபோல் நடக்க தான் செய்யும்’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த மாதிரி ஆடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அருமையான நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும். இந்த போட்டி தொடரில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. முஸ்தாபிகுர் பந்து வீசிய விதம் ஆடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே இறங்கி அடித்து ஆட வேண்டிய நிலையில் இருந்தேன். பந்து வரும் திசையிலேயே அடித்து ஆட எடுத்து கொண்ட பயிற்சி கைகொடுத்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது கடினமானதாகும். எனவே ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் அதனை விட்டு விடக்கூடாது. அணியின் உதவியாளர்கள் உள்பட பின்னணியில் இருந்து உதவும் அனைவருக்கும் நன்றி. அவர்கள் எனக்கு எப்பொழுதும் ஆதரவு அளித்து வருகின்றனர். இலங்கை ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளித்ததுடன் உதவிகரமாகவும் இருந்தது’ என்று கூறினார்.

தொடர்நாயகன் விருது பெற்ற வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டியில், ‘இளம் வயதிலேயே தொடர்நாயகன் விருதை பெற்று இருப்பது சிறப்பானதாகும். இதற்காக எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். பவர்பிளேயில் பந்து வீசுவது என்பது சவாலான பணியாகும். நான் எப்பொழுதுமே பேட்ஸ்மேன்களின் மனநிலையை கணித்து தான் பந்து வீச முயற்சிக்கிறேன். தினேஷ் கார்த்திக் அருமையாக பேட்டிங் செய்து இந்த போட்டி தொடரை எங்களுக்கு நினைவுகூரத்தக்கதாக மாற்றினார்’ என்று தெரிவித்தார்.