கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை இடித்ததால் விதிக்கப்பட்டரபடா மீதான 2 டெஸ்ட் தடை நீக்கம் + "||" + Australian Captain Steven Summit On the Rapta imposed by the stroke

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை இடித்ததால் விதிக்கப்பட்டரபடா மீதான 2 டெஸ்ட் தடை நீக்கம்

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை இடித்ததால் விதிக்கப்பட்டரபடா மீதான 2 டெஸ்ட் தடை நீக்கம்
களத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் தோள்பட்டையை இடித்ததால் 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்ட ரபடாவின் அப்பீலுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த டெஸ்டில் அவர் ஆடுவார்.
கேப்டவுன்,

களத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் தோள்பட்டையை இடித்ததால் 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்ட ரபடாவின் அப்பீலுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த டெஸ்டில் அவர் ஆடுவார்.

சர்ச்சையில் ரபடா


போர்ட் எலிசபெத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா மொத்தம் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக பிரகாசித்தார்.

இந்த டெஸ்டின் போது ரபடா, இரண்டு விதமான சர்ச்சையில் சிக்கினார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் விக்கெட்டை வீழ்த்திய ரபடா அவரை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் அவரது தோள்பட்டையிலும் இடித்தார். அடுத்ததாக 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னரின் விக்கெட்டை கபளகரம் செய்ததும், ‘வெளியே போ’ என்று சைகை காட்டினார்.

2 டெஸ்டில் ஆட தடை


கிரிக்கெட் வீரர்களின் நடத்தை விதியை மீறியதற்காக அவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ஜெப் குரோவ் விசாரணை நடத்தினார். இதன் முடிவில் ஸ்டீவன் சுமித் மீது உடல்ரீதியாக மோதிக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்த போட்டி நடுவர், ரபடாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதித்ததுடன் தண்டனையாக 3 தகுதி இழப்பு புள்ளியும் வழங்கினார். இதே போல் வார்னரை சீண்டியதற்காக ஒரு தகுதி இழப்பு புள்ளி அளிக்கப்பட்டது.

ஏற்கனவே 5 தகுதி இழப்பு புள்ளியை தனது பெயரில் வைத்திருந்த ரபடா இந்த ஒழுங்கீன செயல்களுக்காக பெற்ற புள்ளிகளையும் சேர்த்து அதன் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 24 மாதங்களுக்குள் தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை 8-ஐ தாண்டினால் 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்படும். இதன் அடிப்படையில் ரபடாவுக்கு 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

தண்டனை குறைப்பு

உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலரான ரபடா தடையில் சிக்கியதால் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதிருப்திக்குள்ளானது. இதை எதிர்த்து ஐ.சி.சி.யிடம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. அப்பீல் குறித்து விசாரிக்க, நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹெரோன் விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் அவர் விசாரணை மேற்கொண்டார். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்த டாலி மோபு தலைமையிலான வழக்கறிஞர் குழு ரபடா தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தது. 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த விசாரணையின் போது, நான் வேண்டுமென்றே ஸ்டீவன் சுமித்தை இடிக்கவில்லை, தற்செயலாக அது நடந்தது என்று ரபடா வாதிட்டார்.

விசாரணை முடிவில் மைக்கேல் ஹெரோன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் ரபடா மீதான குற்றச்சாட்டுக்குரிய கடுமையான பிரிவை அவர் தளர்த்தினார். ‘ஸ்டீவன் சுமித் மீது உரசியது முறையற்றது; வேண்டுமென்றே செய்யப்பட்டது’ என்பதில் முழுமையான திருப்தி அடையாத ஹெரோன், குற்றச்சாட்டு பிரிவு லெவல் 2-ல் இருந்து லெவல்-1 ஆக கீழ் மாற்றினார். ரபடாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 50 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும், ஸ்டீவன் சுமித்தை இடித்ததால் விதிக்கப்பட்ட 3 தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கையை ஒன்றாகவும் குறைத்தார். விசாரணை ஆணையரின் முடிவை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்னும் சிக்கல் தான்

இதன் மூலம் ஒட்டுமொத்தத்தில் ரபடா பெற்ற தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை 9-ல் இருந்து 7-ஆக குறைந்தது. இதையடுத்து 2 டெஸ்டில் விளையாட விதிக்கப்பட்ட தடையும் நீங்கியது. இதனால் கேப்டவுனில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அவர் விளையாட முடியும்.

ஆனால் 22 வயதான ரபடா இன்னும் சிக்கலில் தான் இருக்கிறார். மறுபடியும் ஏதாவது ஒழுங்கீன செயலில் ஈடுபட்டு மேற்கொண்டு ஒரு தகுதி இழப்பு புள்ளி பெற்றாலும் தானாகவே 2 டெஸ்ட் தடையை சந்திக்க நேரிடும்.

நாதன் லயன் வரவேற்பு

ரபடா மீதான தடை நீக்கத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், ‘ஐ.சி.சி. தங்களது கடமையை செய்திருக்கிறது. எது சரி, எது தவறு என்று சொல்லும் இடத்தில் நான் இல்லை. ஐ.சி.சி.யின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். சிறந்த பந்து வீச்சாளருக்கு எதிராக விளையாட வேண்டும் என்று தான் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதும் விரும்புகிறார்கள். ரபடா, உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலராக திகழ்கிறார். அவருக்கு எதிராக ஆடுவது எங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். எஞ்சிய இரு டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்த நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்’ என்றார்.