கிரிக்கெட்

‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை’தினேஷ் கார்த்திக் பேட்டி + "||" + 'The desire to play for Chennai Super Kings' Dinesh Karthik interviewed

‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை’தினேஷ் கார்த்திக் பேட்டி

‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை’தினேஷ் கார்த்திக் பேட்டி
‘ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாகும்’ என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
சென்னை,

‘ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாகும்’ என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

தினேஷ் கார்த்திக் பேட்டி

இலங்கையில் நடந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஜெயிப்பது கடினம் என்று கருதிய கட்டத்தில் 7-வது வீரராக களம் கண்ட விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதல் பந்தையையே சிக்சருக்கு தூக்கி அதிரடி காட்டியதுடன் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவை என்ற நிலையில் மீண்டும் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் எல்லா தரப்பினரும் போற்றும் கதாநாயகனாக விசுவரூபம் எடுத்தார்.


தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். இந்திய அணியின் அதிரடி நாயகனாக அவதாரம் எடுத்துள்ள 32 வயதான தினேஷ் கார்த்திக் சென்னை திரும்பியுள்ளார். சேப்பாக்கத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்சர் நம்பிக்கை இருந்தது

வங்காளதேசத்துக்கு எதிரான இறுதிப்போட்டி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆகும். களம் இறங்கிய போது சற்று நெருக்கடியை உணர்ந்தேன். ஆனால் முதல் பந்தில் சிக்சர் அடித்த பிறகு அந்த நெருக்கடி சுலபமானது. கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முடியும் என்று நம்பினேன். அதன்படி கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினேன். இதுபோல் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்கள் இருந்தது. இந்த ஆட்டத்தில் தோற்று இருந்தால் மிகவும் கஷ்டமாக இருந்து இருக்கும். ஏனெனில் லீக் ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக ஆடியது.

6-வது வீரராக களம் இறங்காததால் வருத்தமாகவே இருந்தேன். முஸ்தாபிஜூர் ரகுமான் கடைசியில் பந்து வீசுவார். அவர் பந்து வீச்சை புதியவரான விஜய் சங்கர் எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். அவருடைய பந்து வீச்சை என்னால் நேர்த்தியாக எதிர்கொள்ள முடியும் என்று கேப்டன் ரோகித் சர்மா சொன்ன விளக்கம் ஏற்புடையதாக இருந்தது. இப்போது எல்லோரது கவனமும் எனது பக்கம் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

டோனியுடன் ஒப்பிடுவதா?

தமிழகத்தில் இருந்து நான், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், அபினவ் முகுந்த், முரளி விஜய், ஆர்.அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறோம் என்பது எளிதான காரியம் அல்ல. எங்களில் சீனியர் அஸ்வின் தான். அவர் டெஸ்டில் 300 விக்கெட்டுக்கும் மேல் வீழ்த்தி இருப்பது சாதாரண விஷயமல்ல. இது தமிழக கிரிக்கெட் வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது. தமிழக அணி கடந்த வருடத்தில் சிறப்பாக விளையாடியதால் நாங்கள் 3 பேரும் முத்தரப்பு தொடரில் ஒரேநேரத்தில் இந்திய அணியில் களம் காணும் வாய்ப்பை பெற்றோம். எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடுவதால் இந்திய அணியில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

வாஷிங்டன் சுந்தர் பவர்பிளேயில் நன்றாக பந்து வீசியதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார். அவர் தொடர்நாயகன் விருதுக்கு தகுதியானவர். விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடினார். அவர் இளைஞர் என்பதால் நெருக்கடியான தருணத்தில் சற்று பதற்றம் அடைந்து விட்டார். மற்றபடி அவர் பீல்டிங் உள்பட அனைத்து துறையிலும் கச்சிதமாக செயல்படும் திறமை கொண்டவர். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தை நான் வெற்றிகரமாக முடித்ததை வைத்து டோனியுடன் என்னை ஒப்பிடுவது நியாயமற்றது. அவர் மிகப்பெரிய அனுபவசாலி. கிரிக்கெட் பல்கலைக்கழகத்தில் டோனி முதல்வர் என்றால் அவரிடம் இருந்து நான் இன்னும் கற்றுக்கொள்ளும் மாணவனாக தான் இருக்கிறேன். அவரது பயணம் வேறு. எனது பயணம் வேறாகும்.

தமிழில் பேசுவது ஏன்?

வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோருடன் நான் பல போட்டிகளில் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவர்களிடம் நான் எப்பொழுதும் தமிழில் தான் பேசுவேன். எனவே தான் மைதானத்திலும் தமிழில் பேசினேன். திடீரென அங்கு மட்டும் என்னால் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேச முடியாது. அப்படி செய்தால் தான் வித்தியாசமானதாக இருந்து இருக்கும். மற்றபடி எதிரணி பேட்ஸ்மேன்கள் எங்களது திட்டத்தை புரிந்து விடக்கூடாது என்று நினைத்து நான் தமிழில் பேசவில்லை.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாகும். முதல்தர போட்டிகளில் நான் தமிழக அணியை தவிர வேறு எந்த மாநில அணிக்காகவும் விளையாடியதில்லை. இருப்பினும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக விளையாட முடியவில்லையே? என்ற வருத்தம் எனக்கு இன்னும் இருக்கிறது. ஆனால் ஏலத்தில் எந்த அணியினர் நம்மை தேர்வு செய்வார்கள் என்பது நம் கையில் இல்லை. அது அந்த நேரத்தை பொறுத்து அணிகள் எடுக்கும் முடிவாகும். ஒரு மாநிலத்தை சேர்ந்தவர் மற்றொரு மாநில அணிக்காக ஆடுவது தான் ஐ.பி.எல். போட்டியின் தனி அழகாகும்.

மிகப்பெரிய பொறுப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது சந்தோஷமாகும். இது மிகப்பெரிய பொறுப்பாகும். உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஐ.பி.எல். போட்டியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். கொல்கத்தா அணியில் சிறந்த வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். முதலில் ஆடும் லெவன் வீரர்களை முடிவு செய்ய வேண்டும். சாம்பியன் பட்டம் வெல்வது குறித்து தற்போது பேசுவது சரியாக இருக்காது. முதலில் ‘டாப்-4’ இடத்தை பிடிப்பதில் கவனம் செலுத்துவோம். ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்த பிறகு தான் சாம்பியன் பட்டம் குறித்து சிந்திக்க முடியும்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.