கிரிக்கெட்

ரபடா மீதான தடை நீக்கம்: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அதிருப்தி + "||" + The ban on Rafada: Australian captain Steven Sumit

ரபடா மீதான தடை நீக்கம்: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அதிருப்தி

ரபடா மீதான தடை நீக்கம்: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அதிருப்தி
ரபடா மீதான தடை நீக்கத்திற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அதிருப்தி தெரிவித்தார்.
கேப்டவுன்,

ரபடா மீதான தடை நீக்கத்தால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், களத்தில் இனி லேசாக இடிக்கலாம் என்பது போல் தீர்ப்பு அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, போர்ட்எலிசபெத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் விக்கெட்டை வீழ்த்தியதும் அவரது தோள்பட்டையை இடித்தார். இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி ஜெப் குரோவ், ரபடா வேண்டுமென்றே சுமித்தை இடித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு 2 டெஸ்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும் விதிப்பதாக அறிவித்தார்.


இதை எதிர்த்து ரபடா அப்பீல் செய்தார். அப்பீல் குறித்து 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்த விசாரணை ஆணையர் மைக்கேல் ஹெரோன், ரபடாவுக்கு விதிக்கப்பட்ட தகுதி இழப்பு புள்ளி, அபராத கட்டணம் ஆகியவற்றை குறைத்தார். இதன் மூலம் 2 டெஸ்டில் விளையாட விதிக்கப்பட்ட தடையும் நீக்கியது.

இதனால் கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடியோ பதிவில் தெரிந்ததை விட கொஞ்சம் கடுமையாகவே ரபடா என் மீது மோதினார். இதனால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் விக்கெட் வீழ்த்தும் போராட்டத்தில் வெற்றி கண்ட பிறகு பேட்ஸ்மேன் முகத்துக்கு அருகே ஏன் ஓடி வர வேண்டும். எதற்கு இந்த அதீத கொண்டாட்டம்? அவர் வேண்டுமென்றே இடித்தது தெளிவாக தெரியும். அதற்காக எங்களது பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டை சாய்க்கும் போது, எதிரணி பேட்ஸ்மேனின் முகம் அருகே ஆக்ரோஷமாக கத்து, மோது என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன். இது விளையாட்டுக்கு அழகல்ல.

ஆனால் இந்த தீர்ப்பின் மூலம் ஐ.சி.சி. ஒரு தரநிலையை நிர்ணயித்து இருக்கிறது அல்லவா? அதாவது அனுமதி அளிக்கப்பட்ட அளவுக்கு பேட்ஸ்மேனை லேசாக இடிக்கலாம் என்பது போல் தான் மேல்முறையீட்டு தீர்ப்பு காட்டுகிறது. இனி உடல்ரீதியாக உரசி, அதற்கு தண்டனை கிடைத்தால் அதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு செல்வதற்கு இந்த தீர்ப்பு வழிவகுக்கும். இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எனது தரப்பு விளக்கத்தை கேட்காதது ஆச்சரியம் அளித்தது’ என்றார்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. தொடர் 1-1 என்ற சமநிலையில் நீடிக்கும் நிலையில் இந்த டெஸ்ட் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாகும். கடந்த டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி கதாநாயகனாக ஜொலித்த ‘நம்பர் ஒன்’ பவுலரான ரபடா, இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கிறார். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.