கிரிக்கெட்

ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற்றது + "||" + West Indies qualify for World Cup Cricket competition to win Scotland

ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற்றது

ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற்றது
தகுதி சுற்றில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது.
ஹராரே,

தகுதி சுற்று போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. வேகப்பந்து வீச்சாளர் சப்யான் ஷாரிப் வீசிய முதல் பந்திலேயே கிறிஸ் கெய்ல் (0), விக்கெட் கீப்பர் மேத்யூ கிராசிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பும் (0) இதே பவுலரிடம் இதே போன்று ஆட்டம் இழந்தார்.


இதன் பின்னர் இவின் லீவிசும், சாமுவேல்சும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த இணை 121 ரன்கள் திரட்டியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் மறுபடியும் வெஸ்ட் இண்டீஸ் அணி தடம் புரண்டது. லீவிஸ் 66 ரன்களும், சாமுவேல்ஸ் 51 ரன்களும் எடுத்து வெளியேறினர். பின்வரிசை வீரர்களில் யாரும் குறிப்பிடும்படி ஆடவில்லை. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அடுத்து 199 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஸ்காட்லாந்து அணி 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ஓரளவு தாக்குப்பிடித்ததால் அந்த அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. மெக்லியோட் 21 ரன்களும், பெர்ரிங்டான் 33 ரன்களும் தங்களது பங்குக்கு சேர்த்தனர்.

ஸ்காட்லாந்து அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது ஜார்ஜ் முன்சி (32 ரன்), மைக்கேல் லீஸ்க் (14 ரன்) களத்தில் இருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை கொட்டியதால் ஆட்டத்தின் முடிவை அறிய ‘டக்வொர்த்-லீவிஸ்’ முறை பின்பற்றப்பட்டது. இதன்படி 35.2 ஓவர்களில் ஸ்காட்லாந்து 130 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடி முடித்து விட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு தோல்வி) புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியை எட்டியதன் மூலம் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது. தோல்வி அடைந்த ஸ்காட்லாந்து அணி 5 புள்ளியுடன் (2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டை) வெளியேறியது.

இன்றைய சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன. இதில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் இறுதிசுற்றை எட்டி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று விடும். மாறாக ஜிம்பாப்வே தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு உலக கோப்பை வாய்ப்பு கிட்டும்.

வெஸ்ட் இண்டீசை காப்பாற்றிய மழை

இந்த ஆட்டத்தில் மழை பெய்த போது ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு 88 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. எனவே வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சரிசமமாக இருந்தது என்றே சொல்ல முடியும். ஒருவேளை ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணி 7 புள்ளிகளுடன் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றிருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி ஏறக்குறைய மூட்டையை கட்டியிருக்கும். அதிர்ஷ்டவசமாக வருணபகவானின் கருணையால் 2 முறை உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தடைகளை எல்லாம் சிக்கலின்றி கடந்து உலக கோப்பை போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.