கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது கடினம்-விஜய் சங்கர் வருத்தம் + "||" + Vijay Shankar has expressed regret that it is difficult to forget what happened in the final match of the tri-series

முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது கடினம்-விஜய் சங்கர் வருத்தம்

முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது கடினம்-விஜய் சங்கர் வருத்தம்
முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது கடினம் என விஜய் சங்கர் வருத்தம் தெரிவித்தார்.
புதுடெல்லி,

‘முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது மிகவும் கடினம்’ என்று தமிழக வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் 18-வது ஓவரை எதிர்கொண்ட இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர், முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 4 பந்துகளை வீணடித்தார். அத்துடன் அந்த ஓவரின் கடைசி பந்தில் மனிஷ் பாண்டே (28 ரன்) அவுட் ஆனார். 18-வது ஓவரில் உதிரியாக மட்டுமே ஒரு ரன் வந்தது. இதனால் கடைசி 2 ஓவர்களில் (12 பந்துகளில்) இந்திய அணி வெற்றிக்கு மேலும் 34 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. எனவே இந்திய அணி சரித்திர தோல்வியை சந்திக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.

நெருக்கடியான நிலையில் களம் கண்ட மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். முதல் பந்திலேயே சிக்சர் விளாசிய அவர் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவை என்ற நிலையில் சிக்சர் அடித்து இந்திய அணியினரை மட்டுமின்றி ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 8 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் திரட்டிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதை பெற்றதுடன், நொடிப்பொழுதில் புகழின் உச்சத்தை எட்டினார். பேட்டிங்கில் தடுமாற்றம் கண்ட விஜய் சங்கர் 19 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

முக்கியமான தருணத்தில் பேட்டிங்கில் சொதப்பிய விஜய்சங்கரின் ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரிய ஆட்டம் குறித்து 27 வயதான விஜய் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

என்னுடைய பெற்றோரும், நெருங்கிய நண்பர்களும் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு இருப்பவை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று எனக்கு ஆதரவாக குறுந்தகவல் செய்திகள் வந்தன. அந்த தருணத்தில் ஏற்பட்ட கசப்பான நினைவில் இருந்து விடுபட்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். என் மீது பரிவு காட்டுவதற்காக அனுப்பப்படும் ஆறுதல் செய்திகள் வேலை செய்யாது.

அன்றைய தினம் எனக்குரிய நாளாக அமையவில்லை. அதனை மறக்கும் வழிமுறையை நான் கண்டுபிடிப்பது கடினமாகும். அந்த விஷயத்தை மறந்து வேறு பணியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது எனக்கு தெரியும். இறுதிப்போட்டியை தவிர்த்து அந்த தொடரில் மற்ற ஆட்டங்கள் எனக்கு சிறப்பாகவே இருந்தது. இந்திய அணிக்காக ஆடுகையில் இதுபோல் நடந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அணிக்காக நான் வெற்றி தேடிக்கொடுத்த ஆட்டங்களில் இதே சமூக வலைதளங்கள் என்னை வெகுவாக புகழ்ந்து இருக்கின்றன.

எதிர்மறையாக நடக்கும் போது, வரும் எல்லா எதிர்தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். நான் பக்குவப்படுவதற்கும், வளர்வதற்கும் இது ஒரு அங்கமாகும். 2-வது அல்லது 3-வது பந்தில் நான் ‘டக்-அவுட்’ ஆகி இருந்தால் எனது ஆட்டம் குறித்து யாரும் கவலைப்பட்டு இருக்கமாட்டார்கள். அதற்காக அப்படி நிகழ வேண்டும் என்று நான் விரும்ப முடியுமா?. நிச்சயமாக முடியாது. மாறாக அந்த சூழ்நிலையை நான் ஏற்றுக்கொள்ள தான் செய்வேன். எப்பொழுதும் பாதுகாப்பான வாய்ப்புகளை சிந்திக்க முடியாது. வரும் சவால்களை ஏற்று போராட வேண்டும்.

எல்லோரும் இறுதிப்போட்டி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது, எனது செயலை நினைத்து நான் மனம் நொந்து போயிருந்தேன். கதாநாயகனாக உருவெடுக்க கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேன். நான் போட்டியை வெற்றிகரமாக முடித்து இருக்க வேண்டும். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்பட அணியில் உள்ள அனைவரும், ‘சிறந்த வீரருக்கும் இதுபோல் நடக்கும். எனவே கவலைப்பட வேண்டாம்’ என்று என்னை தேற்றினார்கள்.

சையது முஸ்தாக் அலி அல்லது விஜய் ஹசாரே போட்டியில் எனது பேட்டிங்கை பார்த்தீர்கள் என்றால் நான் ரன் எடுக்காமல் அதிக பந்துகளை விரயம் செய்தது கிடையாது. ஒன்றிரண்டு ரன்களை சீராக எடுத்து கொண்டே இருப்பேன். ஆனால் முஸ்தாபிஜூர் ரகுமான் உண்மையிலேயே அந்த ஓவரை அருமையாக வீசினார். நான் பந்தை விரயம் ஆக்கியதை மட்டும் தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் கடைசி ஓவரில் நான் பவுண்டரி அடித்ததால் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது என்பது எனது கையில் இல்லை. இன்னும் 2 வாரங்களில் ஐ.பி.எல். போட்டி தொடர் தொடங்குகிறது. தற்போது, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் தான் எனது கவனம் உள்ளது என விஜய் சங்கர் கூறினார்.