சென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு நெருக்கடி இல்லை - வெய்ன் பிராவோ


சென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு நெருக்கடி இல்லை - வெய்ன் பிராவோ
x
தினத்தந்தி 22 March 2018 11:30 PM GMT (Updated: 22 March 2018 8:48 PM GMT)

சென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என வெய்ன் பிராவோ தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் எனக்கு நெருக்கடி எதுவும் இல்லை என்று ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ தெரிவித்தார்.

ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சராக எக்விடாஸ் சிறு நிதி வங்கி 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் வெய்ன் பிராவோ, எம்.விஜய், தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், எக்விடாஸ் சிறு நிதி வங்கி நிர்வாகி சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ (வெஸ்ட்இண்டீஸ்) அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை அணியில் மீண்டும் இணைய இருப்பதை சொந்த ஊருக்கு திரும்புவது போல் உணருகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக சென்னை அணிக்கு ஆட முடியாமல் போனது (சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை) ஏமாற்றம் அளித்தது. ஐ.பி.எல். ஏலத்தின் போது நான் ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் போட்டியில் விளையாடி கொண்டிருந்தேன். சென்னை அணி எப்படியாவது என்னை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு இருந்தேன். அது நடந்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த சென்னை அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணி தகுதி பெற்றதற்காக அணியின் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வெஸ்ட்இண்டீஸ் இல்லாத உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது இத்தாலி இல்லாத உலக கோப்பை கால்பந்து போட்டி போன்றதாகும். அதனை நினைத்து பார்க்கவே முடியாது. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்கள் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது பாராட்டுக்குரியது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சீனியர் வேகப்பந்து வீச்சாளர் என்ற முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெருக்கடி அதிகம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, டோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். எந்தவித நெருக்கடியையும் பதற்றமின்றி சமாளிக்கும் ஆற்றல் படைத்தவர் கேப்டன் டோனி. நெருக்கடியான சூழலை அனுபவித்து விளையாட வேண்டும் என்று டோனி எப்பொழுதும் அறிவுறுத்துவார். உள்ளூர் இளம் வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இவ்வாறு பிராவோ கூறினார்.

தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் அளித்த பேட்டியில், ‘சென்னை அணியில் மீண்டும் இடம் பெற்று இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். சென்னை அணியுடன் மற்ற அணிகளை ஒப்பிட முடியாது. ஏனெனில் சென்னை அணி ஒரு குடும்பம் போன்றது. இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாட என்னை தயார்படுத்தி வருகிறேன்.’ என்றார்.

Next Story