எனது கஷ்டத்தை அறிந்து உதவிய ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்


எனது கஷ்டத்தை அறிந்து உதவிய ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்
x
தினத்தந்தி 23 March 2018 11:00 PM GMT (Updated: 23 March 2018 9:21 PM GMT)

ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன் என கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் தெரிவித்தார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.80 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ரிங்கு சிங். முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் (ரூ.10 லட்சம்) இடம் பெற்றிருந்தார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரிங்கு சிங்குடன் உடன் பிறந்தவர்கள் 5 பேர். அதில் ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது தந்தை கான் சந்த்ரா, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார். தந்தை வேலை செய்யும் கியாஸ் சிலிண்டர் குடோனின் ஒரு பகுதியில் சிறிய வீட்டில் குடும்பத்தினருடன் ரிங்கு சிங் வசிக்கிறார்.

குடும்பத்தின் கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில் காதல் கொண்ட ரிங்கு சிங், அதில் தீவிர ஈடுபாடு காட்டினார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் உத்தரபிரதேச மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பு கிட்டியது. அதன் மூலம் உத்தரபிரதேச அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ரஞ்சி கிரிக்கெட்டில் சதம், கணிசமான தொகைக்கு ஐ.பி.எல். ஏலம் என்று இப்போது ரிங்கு சிங்கின் வாழ்க்கை முறையே மாறி விட்டது. 20 வயதான இடக்கை பேட்ஸ்மேனான ரிங்கு சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.பி.எல். ஏலத்தை, குடோனில் இரண்டு அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் அமர்ந்திருந்து டி.வி.யில் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ரூ.30 முதல் ரூ.35 லட்சம் வரை ஏலம் போவேன் என்று நினைத்தேன். ஆனால் ரூ.80 லட்சத்திற்கு ஏலம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் ஏலம் போனதும், சுரேஷ் ரெய்னா வாழ்த்து செய்தி அனுப்பினார். ரெய்னா தான் எனது முன்மாதிரி. அவரது ஆலோசனைப்படியே நான் எப்போதும் ஆடுகிறேன். நெருக்கடி இன்றி இயல்பாக ஆட வேண்டும் என்று அவர் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஒரு முறை சக மாநில வீரர் அலி முர்தாஜாவுடன் அறையில் தங்கி இருந்த போது, என்னை தேடி ரெய்னா வந்தார். அவரை கண்டதும் நான் அசந்து போய் விட்டேன். அவர் எனக்கு ஒரு ஜோடி குளோவ்ஸ் மற்றும் ஒரு பேட்டை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தினார். இதே போல் தேடி வந்து பல உதவிகளை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநில அணிக்காக அவருடன் இணைந்து விளையாடியதை ஒரு போதும் மறக்க முடியாது. அது ஒரு கனவு போன்று உள்ளது.

கிரிக்கெட் போட்டியில் ஆடுவதன் மூலம் கிடைத்த பணத்தில் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறேன். இன்னும் 2 மாதத்திற்குள் எனது குடும்பத்தினருடன் புதிய வீட்டில் குடியேறுவேன் என ரிங்கு சிங் கூறினார்.

Next Story