தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேர்ப்பு


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 23 March 2018 11:15 PM GMT (Updated: 23 March 2018 9:31 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முனதினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் (121 ரன்), ரபடா (6 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 311 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ரபடா 22 ரன்னிலும், மோர்னே மோர்கல் 4 ரன்னிலும் ‘ஸ்லிப்’ பகுதியில் கேட்ச் ஆனார்கள். டீன் எல்கர் 141 ரன்களுடன் (284 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்து இன்னிங்ஸ் முழுவதும் விளையாடி ஆட்டம் இழக்காமல் டீன் எல்கர் நிற்பது இது 3-வது நிகழ்வாகும். இந்த வகையில் வெஸ்ட் இண்டீசின் தேஸ்மான்ட் ஹெய்ன்சின் சாதனையை (இவரும் மூன்று முறை தொடக்க வீரராக இறங்கி கடைசி வரை களத்தில் இருந்துள்ளார்) சமன் செய்தார்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் பான்கிராப்ட்டும், துணை கேப்டன் டேவிட் வார்னரும் இறங்கினர். ‘நம்பர் ஒன்’ பவுலர் ரபடாவின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டிய வார்னர், அவரது இன்னொரு ஓவரின் முதல் இரு பந்துகளில் சிக்சர், பவுண்டரி ஓடவிட்டார். இதற்கு அடுத்த பந்தில் வார்னருக்கு (30 ரன், 14 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பு சில தூரம் பல்டி அடித்தது.

அடுத்து வந்த உஸ்மான் கவாஜா (5 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. பான்கிராப்ட் தனது பங்குக்கு 77 ரன்கள் எடுத்தார். மிடில் வரிசை விக்கெட்டுகள் வேகமாக காலியானதால் 175 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது.

இந்த சூழலில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னும், நாதன் லயனும் ஜோடி சேர்ந்து தங்கள் அணியை கவுரவமான நிலைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் 9-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் திரட்டினர். லயன் 47 ரன்களில் (38 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெய்ன் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்க தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளும், ரபடா 3 விக்கெட்டுகளும், பிலாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

மோர்கல் 300 விக்கெட்

முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 301 ஆக (85 டெஸ்ட்) உயர்ந்தது. டொனால்டு, ஷான் பொல்லாக், நிதினி, ஸ்டெயின் ஆகியோருக்கு பிறகு 300-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க பவுலர் என்ற சிறப்பை மோர்கல் பெற்றார். 33 வயதான மோர்கல் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ரசிகருடன் வார்னர் தகராறு

இந்த ஆட்டத்தில் அதிரடியாக 14 பந்துகளில் 30 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், ரசிகர் ஒருவருடன் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறி ஓய்வறையை நோக்கி வார்னர் நடந்த போது, அருகில் வந்த ரசிகர் ஒருவர் ஏதோ கூற வார்னர் கோபமடைந்தார். அந்த ரசிகருடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். அந்த ரசிகரும் திட்டினார். பின்னர் மைதான பாதுகாப்பு ஊழியர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்.

Next Story