ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் : தென்ஆப்பிரிக்க அணி 294 ரன்கள் முன்னிலை


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் : தென்ஆப்பிரிக்க அணி 294 ரன்கள் முன்னிலை
x
தினத்தந்தி 24 March 2018 10:30 PM GMT (Updated: 24 March 2018 8:11 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 294 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

கேப்டவுன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்து வரும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி கைவசம் 5 விக்கெட்டுகள் வைத்துள்ள நிலையில் இதுவரை 294 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 311 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டிம் பெய்ன் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

அடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. டீன் எல்கர் 14 ரன்னிலும், அம்லா 31 ரன்னிலும், மார்க்ராம் 84 ரன்னிலும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 20 ரன்னிலும், பவுமா 5 ரன்னிலும் வெளியேறினர்.

ரன் கணக்கை சிக்சருடன் தொடங்கிய டிவில்லியர்ஸ் நிலைத்து நின்று ஆடி, அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 72 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. டிவில்லியர்ஸ் 51 ரன்களுடனும் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 29 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

தென்ஆப்பிரிக்க அணி இதுவரை 294 ரன்கள் முன்னிலை பெற்று, நல்ல நிலையை எட்டியுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story