முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2-வது தோல்வி


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2-வது தோல்வி
x
தினத்தந்தி 25 March 2018 10:30 PM GMT (Updated: 25 March 2018 7:08 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-வது முறையாக தோல்வியடைந்தது.

மும்பை,

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் மிதாலிராஜ் (53 ரன், 43 பந்து, 7 பவுண்டரி), மந்தனா (76 ரன், 40 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை டேனிலி வியாட், ரன்மழை பொழிந்து சதத்தோடு தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அந்த அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 190-க்கும் மேலான ஸ்கோரை வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பது (சேசிங்) இதுவே முதல் முறையாகும். 26 வயதான டேனிலி வியாட் 15 பவுண்டரி, 5 சிக்சருடன் 124 ரன்கள் (64 பந்து) நொறுக்கினார்.

இந்திய அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 4-வது லீக்கில் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவை (காலை 10 மணி) சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் வெளியேற வேண்டியது தான்.

Next Story