தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 107 ரன்னில் சுருண்டு படுதோல்வி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 107 ரன்னில் சுருண்டு படுதோல்வி
x
தினத்தந்தி 25 March 2018 11:15 PM GMT (Updated: 25 March 2018 8:09 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 107 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

கேப்டவுன்,

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 311 ரன்களும், ஆஸ்திரேலியா 255 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து மட்டையை சுழட்டிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 373 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. டிவில்லியர்ஸ் (63 ரன்), குயின்டான் டி காக் (65 ரன்), பிலாண்டர் (52 ரன், நாட்-அவுட்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் லயனின் டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 301 ஆக (77 டெஸ்ட்) உயர்ந்தது. இதன் மூலம் 300-க்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது ஆஸ்திரேலிய பவுலர் என்ற சிறப்பை பெற்றார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 430 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையினால் மனரீதியாக உடைந்து போய் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களால் களத்தில் இயல்பாக கவனம் செலுத்தி ஆட முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் கேமரூன் பான்கிராப்ட் (26 ரன்), டேவிட் வார்னர் (32 ரன்) சற்று தாக்குப்பிடித்து ஆடினர். இவர்களுக்கு பிறகு வந்த வீரர்கள் ஏதோ கடமைக்கு களத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். கேப்டன் பதவியை தாரைவார்த்து ஒரு வீரராக களம் கண்ட ஸ்டீவன் சுமித் 7 ரன்னில் மோர்னே மோர்கலின் பந்து வீச்சில், ‘கல்லி’ திசையில் நின்ற டீன் எல்கரிடம் கேட்ச் ஆனார்.

தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பிறகு மிட்செல் மார்ஷ் (12 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி 39.4 ஓவர்களில் 107 ரன்களில் முடங்கியது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்தது. தென்ஆப்பிரிக்க தரப்பில் மோர்னே மோர்கல் 5 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டும், ரபடா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். மோர்னே மோர்கல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

ரன் வித்தியாசம் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் 2-வது மிகப்பெரிய வெற்றியாக இது பதிவானது. அதே சமயம் சிறந்த வெற்றியாக 1970-ம் ஆண்டு போர்ட்எலிசபெத்தில் நடந்த டெஸ்டில் 323 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி நீடிக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

Next Story