இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
x
தினத்தந்தி 26 March 2018 10:45 PM GMT (Updated: 26 March 2018 8:47 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆக்லாந்து, 

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் (பகல்-இரவு) கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

369 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் மலான் 19 ரன்னுடன் களத்தில் நின்றார். நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணியினர் கடுமையாக போராடினார்கள். இருப்பினும் நியூசிலாந்து வீரர்களின் அபாரமாக பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

டேவிட் மலான் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். தாக்குப்பிடித்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் (66 ரன்கள், 188 பந்துகளில் 6 பவுண்டரியுடன்), கிறிஸ் வோக்ஸ் (52 ரன்கள், 118 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) ஆகியோர் அரை சதத்தை கடந்த நிலையில் நீல் வாக்னெர் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 126.1 ஓவர்களில் 320 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், நீல் வாக்னெர், டுட் ஆஸ்ட்லே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். மொத்தம் 9 விக்கெட்டுகள் சாய்த்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

Next Story