கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம் + "||" + Rahane appointed as captain of Rajasthan Royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்
பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
புதுடெல்லி, 

பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி பெருத்த சர்ச்சைக்கு உள்ளானது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் சொரசொரப்பான காகிதத்தை தனது உள்ளாடையில் மறைத்து வைத்து பந்தை சேதப்படுத்தியது வீடியோ பதிவின் மூலம் அம்பலமானது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகுவதற்கு வசதியாக பந்தை சக வீரர்களுடன் இணைந்து திட்டம் தீட்டி பந்தை சேதப்படுத்தியதை ஸ்டீவன் ஸ்மித் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த கூட்டு சதியில் யார் யாருக்கு? பங்கு உண்டு என்பதை அவர் வெளியிட மறுத்து விட்டார். துணைகேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சீனியர் வீரர்களின் ஆலோசனையுடன் தான் அவர் இந்த இழிவான செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் தவறான செயலால் தங்கள் நாட்டுக்கு பெருத்த அவப்பெயர் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் பிரதமர் உள்பட அந்த நாட்டை சேர்ந்த அனைத்து தரப்பினரும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், இது அவமானகரமான செயல் என்று கடுமையாக கண்டித்தனர். இதனை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேப்டன் ஸ்டீவன் சுமித், துணைகேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரை தங்களது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை மேற்கொண்டனர்.

அத்துடன் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனி குழுவை தென்ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட், தவறை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்தார். பான்கிராப்ட்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டன.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவன் சுமித் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கும் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் கேப்டன் பதவியில் தொடருவாரா? விலகுவாரா? என்று கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவன் சுமித் நேற்று விலகினார். இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இந்திய வீரர் ரஹானேவை நியமனம் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் தலைவர் ஜூபின் பஹருச்சா அளித்த பேட்டியில், ‘தற்போதைய சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் ஐ.பி.எல். போட்டிக்கு முழுவீச்சில் தயாராகும் பொருட்டு கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை அணியின் நலன் கருதி எடுத்துள்ளதாக ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவர் அணியில் தொடருவார். கேப்டவுன் சம்பவத்தால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துடனும், ஸ்டீவன் சுமித்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அதேநேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். எங்கள் அணியின் 2 ஆண்டு தடைக்கு முந்தைய போட்டிகளில் ரஹானே அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ரஹானே கிரிக்கெட்டின் கலாசாரம் மற்றும் எங்கள் அணியின் மதிப்பை நன்கு அறிந்தவர். அவர் ராஜஸ்தான் அணிக்கு சிறந்த கேப்டனாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் தொடர்புடைய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஐ.பி.எல். போட்டிக்கான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவர் கேப்டன் பதவியில் நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா? என்று ஐதராபாத் அணியின் ஆலோசகர் வி.வி.எஸ்.லட்சுமணிடம் கேட்ட போது, ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தே இந்த விஷயத்தில் நாங்கள் செயல்படுவோம். தற்போது வேறு எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.