கிரிக்கெட்

உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவு:ஸ்டீவன் சுமித், வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட வாய்ப்பு + "||" + Steven Summit, Warner The possibility of a year ban

உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவு:ஸ்டீவன் சுமித், வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட வாய்ப்பு

உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவு:ஸ்டீவன் சுமித், வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட வாய்ப்பு
பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெல்போர்ன்,

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தியதால் சிக்கல்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பொருளை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்காக தங்கள் அணியின் சீனியர் வீரர்கள் கூட்டு சேர்ந்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார்.

நாட்டின் கவுரவத்துக்கு ஸ்டீவன் சுமித் சகாக்கள் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் வரிந்து கட்டின. அதிர்ச்சிக்குள்ளான ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது பொறுப்பில் இருந்து விலகினர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய விசாரணை முடிவில் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதத்துடன், 3 தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டது.

ஓராண்டு தடை?


இது ஒரு பக்கம் இருக்க, நடந்தது என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு குழுவை தென்ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகள் குழு தலைவர் இயான் ராய் தலைமையிலான அந்த குழுவினர் ஸ்டீவன் சுமித், வார்னர் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தவறு செய்ததை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட ஸ்டீவன் சுமித், அவருக்கு உடந்தையாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதியை மீறி இருப்பதால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருவருக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தகைய நடவடிக்கை பாய்ந்தால் இரு முன்னணி வீரர்களும் சொந்த மண்ணில் டிசம்பர், ஜனவரி மாதம் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது. அதே சமயம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர்கள் ஆடுவது என்பது, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்குவதை பொறுத்து அமையும்.

தாயகம் திரும்புகிறார்கள்

இதற்கிடையே ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரை உடனடியாக தாயகம் திரும்ப ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லாண்ட் நேற்றிரவு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இன்று தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புகிறார்கள்.

அதே சமயம் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமானுக்கு இதில் தொடர்பு இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதால் அவர் பயிற்சியாளராக தொடருவார், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டுக்கு கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நீடிப்பார் என்று ஜேம்ஸ் சதர்லாண்ட் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இன்று முடிவு அறிவிப்பு?

சுமித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு என்ன தண்டனை என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ள வைத்துள்ள ‘வாட்ஸ்அப் குரூப்’ப்பில் இருந்து வார்னர் விலகி இருக்கிறார்.