ஐபிஎல் 11-வது சீசன் : ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் வார்னர் நீக்கம்


ஐபிஎல் 11-வது சீசன் : ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலியா  வீரர் வார்னர் நீக்கம்
x
தினத்தந்தி 28 March 2018 7:11 AM GMT (Updated: 28 March 2018 7:11 AM GMT)

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் தொடர்புடைய டேவிட் வார்னர் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். #DavidWarner #IPL2018 #BallTampering #SunrisersHyderabad

மும்பை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பொருளை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்காக தங்கள் அணியின் சீனியர் வீரர்கள் கூட்டு சேர்ந்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார்.

நாட்டின் கவுரவத்துக்கு ஸ்டீவன் சுமித் சகாக்கள் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் வரிந்து கட்டின. அதிர்ச்சிக்குள்ளான ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது பொறுப்பில் இருந்து விலகினர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய விசாரணை முடிவில் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதத்துடன், 3 தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவன் சுமித்  விலகினார். அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அது போல் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் தொடர்புடைய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஐ.பி.எல். போட்டிக்கான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவரும் தற்போது நீக்கப்பட்டு உள்ளார். அந்த அணிக்கு விரைவில் கேப்டன் நியமிக்கப்படுவார்.

Next Story