ஐதராபாத் அணியின் கேப்டனாக வில்லியம்சன் நியமனம்


ஐதராபாத் அணியின் கேப்டனாக வில்லியம்சன் நியமனம்
x
தினத்தந்தி 29 March 2018 9:15 PM GMT (Updated: 29 March 2018 8:14 PM GMT)

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

புதுடெல்லி,

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வில்லியம்சனுக்கு பொறுப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்தார். பந்தை தேசப்படுத்திய சர்ச்சையில் அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ல் அவர் களம் இறங்க அனுமதி இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து விட்டது.

இந்த நிலையில் வார்னருக்கு பதிலாக அந்த அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் நேற்று நியமிக்கப்பட்டார். 27 வயதான வில்லியம்சன் ஐதராபாத் அணிக்காக 15 ஆட்டங்களில் விளையாடி 411 ரன்கள் எடுத்துள்ளார். ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வில்லியம்சன் கூறுகையில், ‘இந்த சீசனுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறேன். திறமையான வீரர்கள் அடங்கிய ஐதராபாத் அணியை வழிநடத்துவதற்கு இது நல்ல வாய்ப்பு. சவால்களை எதிர்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்’ என்றார். கேப்டன் பதவிக்கு ஷிகர் தவானின் பெயரும் பரிசீலிக்கப்பட்டாலும், கேப்டன்ஷிப்பில் அனுபவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் வில்லியம்சனிடம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

வார்னருக்கு பதிலாக மாற்று வீரர் இடத்திற்கு இலங்கையின் அதிரடி வீரர் குசல் பெரேராவை இழுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

வார்னர் குறித்து கருத்து

வார்னரின் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வில்லியம்சன், ‘வார்னர் அப்படி ஒன்றும் மோசமான மனிதர் அல்ல. அவர்கள் (வார்னர், சுமித்) தவறிழைத்ததை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். தங்களது செயலை நினைத்து வருந்துகிறார்கள். எனவே இந்த கடுமையான தண்டனையை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உலகத்தரம் வாய்ந்த இரண்டு வீரர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டது அவமானகரமானது. இதன் மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ ன்றார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான கேப்டன்களில் வில்லியம்சனை தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Next Story