“பெரிய தவறு செய்துவிட்டேன்; மன்னித்து விடுங்கள்’ கண்ணீர் மல்க ஸ்டீவன் சுமித் உருக்கம்


“பெரிய தவறு செய்துவிட்டேன்; மன்னித்து விடுங்கள்’ கண்ணீர் மல்க ஸ்டீவன் சுமித் உருக்கம்
x
தினத்தந்தி 29 March 2018 9:30 PM GMT (Updated: 30 March 2018 1:10 PM GMT)

‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரிய தவறு செய்து விட்டேன்; மன்னித்து விடுங்கள்’ என்று ஸ்டீவன் சுமித் கண்ணீர் மல்க கூறினார்.

சிட்னி,

‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரிய தவறு செய்து விட்டேன்; மன்னித்து விடுங்கள்’ என்று ஸ்டீவன் சுமித் கண்ணீர் மல்க கூறினார்.

சிக்கிய ஆஸ்திரேலியர்கள்


கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற சொரசொரப்பு காகிதத்தால் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும், இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது. ஆஸ்திரேலிய வீரர்களின் மோசடி, உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவி பறிபோனது.

இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதித்தது. அத்துடன் தடை காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கு ஸ்டீவன் சுமித்தின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

கண்ணீர் மல்க சுமித் பேட்டி


இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான 28 வயதான ஸ்டீவன் சுமித் சிட்னி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது குற்றஉணர்வில் வெதும்பிய அவர் தன்னை மன்னித்து விடும்படி கூறி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். அருகில் நின்ற அவரது தந்தை பீட்டர் அவரை தேற்றினார்.

கண்ணீர் மல்க 5 நிமிடங்கள் பேசிய ஸ்டீவன் சுமித், தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை தழுதழுத்த குரலில் படித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அணியின் சக வீரர்களும், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும், ஏமாற்றமும் அடைந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். கேப்டவுன் டெஸ்டில் நடந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்ற முறையில் நானே முழு பொறுப்பு ஏற்கிறேன். வேறு யாரையும் குற்றம் சாட்டப்போவதில்லை. அணியை வழிநடத்தியதில் எனது தலைமைப்பண்பு தோற்று விட்டது. முடிவு எடுப்பதில் நான் மிக மோசமான தவறை செய்து விட்டேன். அதற்குரிய விளைவை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. என்னால் ஏற்பட்ட பாதிப்பை சரிகட்ட என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்.

மீண்டு வருவேன்

இதன் மூலம் ஏதாவது நல்ல விளைவு ஏற்பட்டால், அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தால், அந்த மாற்றத்திற்குரிய கருவியாக நான் இருப்பேன் என்று நம்புகிறேன். நான் இழைத்த தவறு வாழ்நாள் முழுவதும் வருத்தத்தை அளித்துக் கொண்டே இருக் கும் என்பதை அறிவேன். இப்போது மனதளவில் நொறுங்கி போய் உள்ளேன்.

ஆஸ்திரேலிய அணிக்காக பங்கேற்றதும், கேப்டன் பதவி வகித்ததும் எனக்கு கிட்டிய மிகப்பெரிய கவுரவமாகும். இந்த உலகில் கிரிக்கெட் மிகச்சிறந்த விளையாட்டு. அது தான் எனது வாழ்க்கை. அது திரும்ப கிடைக்கும் என்று நம்புகிறேன்.

காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள். இழந்த பெருமையையும் என்னால் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் ஒரு முறை தவறுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு தெரிந்தவரை இதற்கு முன்பு இப்படியொரு சம்பவம் (பந்தை தேசப்படுத்துதல்) நடந்ததில்லை. முதல்முறையாக நடந்து விட்டது. மீண்டும் ஒரு போதும் இது போன்று நடக்காது என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு ஸ்டீவன் சுமித் கூறினார்.

வார்னர், பான்கிராப்ட் வேதனை

பந்தை சேதப்படுத்தும் சதி திட்டத்தை வகுத்து, அதை களத்தில் செயல்படுத்த முயற்சித்த டேவிட் வார்னரும் மவுனத்தை கலைத்துள்ளார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் செய்துள்ள பதிவில் ‘நான் எனது பங்கிற்கு மன்னிப்பு கேட்டு பொறுப்பு ஏற்கிறேன். இந்த விளையாட்டுக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய துன்பத்தை புரிந்து கொள்கிறேன். சிறுவயதில் இருந்தே நான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டேன். என்னை திடப்படுத்திக் கொள்ள எனது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் ஒரு சில நாட்கள் செலவிட உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

25 வயதான பான்கிராப்ட் நிருபர்களிடம் கூறுகையில், ‘ மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற காகிதம் குறித்து நடுவர்கள் கேட்ட போது பொய் சொல்லி விட்டேன். அந்த சூழலில் நான் மிகவும் பயந்து போனேன். எனது நடத்தைக்காக வேதனை அடைகிறேன். மன்னிப்பு கேட்கிறேன். இந்த தவறுக்காக எனது வாழ்க்கை முழுவதும் நான் வருத்தப்பட வேண்டி இருக்கும்’ என்றார்.

Next Story