பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற ஸ்டீவன் சுமித்துக்கு அஸ்வின், கம்பீர் ஆதரவு


பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற ஸ்டீவன் சுமித்துக்கு அஸ்வின், கம்பீர் ஆதரவு
x
தினத்தந்தி 30 March 2018 10:00 PM GMT (Updated: 30 March 2018 8:29 PM GMT)

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு இந்திய வீரர்கள் அஸ்வின், கம்பீர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு இந்திய வீரர்கள் அஸ்வின், கம்பீர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சுமித்துக்கு தடை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், இளம் வீரர் பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் எதிரொலியாக ஒரு சில ஸ்பான்சர்ஷிப்பை சுமித்தும், வார்னரும் இழந்துள்ளனர்.

“எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்” என்று கண்ணீர் விட்டு கதறிய ஸ்டீவன் சுமித், தனது செயலை மன்னிக்கும்படியும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவரது அழுகை, அவர் மீதான கோபத்தை சற்று தணித்துள்ளது.

கண்ணீரை விரும்பும் உலகம்

இந்த நிலையில் மனரீதியாக துவண்டு போய் உள்ள அவருக்கு இந்திய வீரர்கள் அஸ்வின், கவுதம் கம்பீர் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான அஸ்வின் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்த உலகம் உங்களது (சுமித்) அழுகையை பார்க்க விரும்புகிறது. இப்போது நீங்கள் கண்ணீர் விட்டதால், இனி அவர்கள் மனநிறைவுடன் சந்தோஷமாக வாழத் தொடங்கி விடுவார்கள். பரிவு என்பது வெறும் வார்த்தையாக மட்டும் அல்லாமல் அது மக்களிடம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய ஒன்று. ஸ்டீவன் சுமித்தும், பான்கிராப்ட்டும் இதில் இருந்து மீள்வதற்கான மனவலிமையை கடவுள் வழங்குவார்.

இதே போல் இந்த கடினமான சூழலில் இருந்து போராடி வெளிவர டேவிட் வார்னருக்கும் மனவலிமை தேவை. இவர்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் எல்லாவிதமான ஆதரவையும் வழங்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

கம்பீர் கருத்து


டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனான கவுதம் கம்பீர் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஊழல் இல்லாத சூழலே கிரிக்கெட்டுக்கு தேவை. ஆனால் சுமித், வார்னருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் கடுமையானது தான். ஊதிய உயர்வு கேட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராடியதன் விளைவாக இந்த தடையை அவர்கள் அனுபவிக்கிறார்களா? வீரர்களின் நலனுக்காக குரல் எழுப்பியவர்களை நிர்வாகிகள் கேவலப்படுத்திய வரலாறு உண்டு. இதற்கு சிறந்த உதாரணமாக இயான் சேப்பலை சொல்ல முடியும்.

ஸ்டீவன் சுமித்தின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரின் நிலைமையை பார்த்து மிகவும் வருந்துகிறேன். ஆஸ்திரேலிய ஊடகத்தினரும், மக்களும் சுலபமான இலக்கான அவரின் குடும்பத்தினரை விமர்சிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். தடையை விடவும் ஏமாற்றுக்காரர் என்ற பெயரை சுமந்து கொண்டு வாழ்வது தான் மிகப்பெரிய தண்டனை.

ஊழல்வாதி அல்ல

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு இருக்கலாம். எனது பார்வையில் சுமித் மோசடி செய்தவர் போல் தோன்றவில்லை. தனது தேசத்திற்காக, தனது அணிக்காக எந்த வழியிலாவது வெற்றி பெற முயற்சிக்கும் கேப்டனாகவே அவரை பார்க்கிறேன். அதற்காக அவர் கையாண்ட விதம் தான் கேள்விக்குறியானது. அவரை ஊழல்வாதி என்று யாரும் முத்திரை குத்த வேண்டாம்.

இவ்வாறு கம்பீர் அதில் கூறியுள்ளார்.

Next Story