‘‘ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட முடியாமல் போகலாம்’’ டேவிட் வார்னர் கண்ணீர்


‘‘ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட முடியாமல் போகலாம்’’ டேவிட் வார்னர் கண்ணீர்
x
தினத்தந்தி 31 March 2018 9:30 PM GMT (Updated: 31 March 2018 8:49 PM GMT)

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மறுபடியும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியாமல் போகலாம் என்று அழுதபடி கூறினார்.

சிட்னி,

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மறுபடியும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியாமல் போகலாம் என்று அழுதபடி கூறினார்.

டேவிட் வார்னர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3–வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு விளையாட தடையும், இன்னொரு வீரர் கேமரூன் பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது. தனது செயலுக்காக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ஸ்டீவன் சுமித் கண்ணீர் விட்டு கதறினார்.

பந்தை சேதப்படுத்திய திட்டத்துக்கு சூத்திரதாரியாக விளங்கிய 31 வயதான டேவிட் வார்னர் சிட்னியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை வாசித்த போது உணர்ச்சிவசப்பட்டு பலமுறை கண்கலங்கினார். கண்ணீர் மல்க தழுதழுத்த குரலில் வார்னர் கூறியதாவது:–

ரசிகர்கள், கிரிக்கெட்டின் நலம் விரும்பிகள், ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்திற்கு உந்துசக்தியாக இருந்தவர்கள் ஆகியோரிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் மீதான அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டேன். இதற்கு எல்லாம் உரிய பரிகாரம் செய்து, இழந்த மரியாதையை அவர்களிடம் இருந்து மீண்டும் பெற முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.

மன்னிக்க முடியாத தவறு

அணியின் சக வீரர்கள், பயிற்சி உதவியாளர்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினரிடமும் எனது செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன். கேப்டவுன் டெஸ்டில் 3–வது நாளில் நடந்த சம்பவத்தில் எனது தொடர்புடைய செயலுக்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக எனது கடமையை செய்ய தவறி விட்டேன். ஸ்டீவன் சுமித், பான்கிராப்ட் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த முடிவு மிகவும் வருந்தத்தக்கது. மன்னிக்க முடியாதது.

கிரிக்கெட் விளையாடுவதற்குரிய அருமையான ஒரு தேசம் தென்ஆப்பிரிக்கா. அங்கு கிரிக்கெட்டுக்கு என் மூலம் களங்கம் ஏற்பட்டு விட்டது. அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களிடமும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதயம் நொறுங்குகிறது

நான் நேசிக்கும், விரும்பும் சக வீரர்களுடன் இணைந்து களம் இறங்க முடியாததை நினைக்கும் போது இதயமே நொறுங்கி விடும் போலிருக்கிறது. அவர்களை நான் ஏமாற்றி விட்டேன். ஆஸ்திரேலிய அணிக்காக என்றாவது ஒரு நாள் மீண்டும் விளையாடக்கூடிய கவுரவம் கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கை மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் எனது தேச அணிக்காக இனி விளையாட முடியாமல் போகலாம் என்ற உண்மையையும் உணர்ந்துள்ளேன். வரும் வாரங்களில் இது எப்படி நடந்தது? அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திப்பேன். நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று எனக்குள் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எப்போதும் ஆஸ்திரேலிய அணிக்காக வெற்றியை கொண்டு வர வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருப்பேன். இதற்காக எதையோ செய்ய போய், எதிர்விளைவுகள் ஏற்பட்டு விட்டன. இந்த வருத்தம் எனது வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

குடும்பத்தினரிடம் மன்னிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தான் எனது குடும்பம். எனது நண்பர்கள் தென்ஆப்பிரிக்காவில் 4–வது டெஸ்டில் விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், நான் இங்கு உங்களிடம் (நிருபர்கள்) பேசிக்கொண்டிருப்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. நானும் அந்த டெஸ்டில் விளையாடியிருக்க வேண்டும்.

எனது மனைவி, மகள்களிடமும் இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்கிறேன். அவர்கள் என்னிடம் காட்டும் அன்பு மற்ற எல்லாவற்றையும் விட மேன்மையானது. குடும்பத்தினர் ஆதரவு இன்றி என்னால் எதுவுமே செய்ய முடியாது. மீண்டும் இப்படியொரு தர்மசங்கடமான நிலைக்கு அவர்களை தள்ளமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு வார்னர் கூறினார்.

ஓய்வு பெறுவாரா?

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவீர்களா? என்று வார்னரிடம் கேட்ட போது, எல்லாவிதமான வாய்ப்புகள் குறித்தும் குடும்பத்தினரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று பதில் அளித்தார்.

பந்தின் தன்மையை மாற்ற வேண்டும் என்ற சதித்திட்டம் அணியில் எத்தனை வீரர்களுக்கு தெரியும்?, இதற்கு முன்பு இது போன்று பந்தை சேதப்படுத்தியது உண்டா? இப்போது மற்ற வீரர்களுடனான உங்களது உறவு கெட்டுபோய் விட்டதா? கடுமையான தண்டனை அளித்த வி‌ஷயத்தில் கிரிக்கெட் வாரியம் உங்களை பலிகடாவாக்கிவிட்டதா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வார்னர் மறுத்து விட்டார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நிருபர்கள் சந்திப்பில் நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்பது தெரியும். அதற்குரிய காலம் வரும் போது எல்லாவற்றுக்கும் பதில் அளிப்பேன். இப்போதைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது’ என்று கூறியுள்ளார்.


Next Story