தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2018 11:00 PM GMT (Updated: 2 April 2018 9:06 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது.

ஜோகன்னஸ்பர்க்,

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 488 ரன்னும், ஆஸ்திரேலிய அணி 221 ரன்னும் எடுத்தன.

ஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ-ஆன்’ கொடுக்காமல் 267 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது. டீன் எல்கர் 39 ரன்னுடனும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 34 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டீன் எல்கர், பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபாரமாக ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் சதம் அடித்தார். அவர் அடித்த 8-வது சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 264 ரன்னாக உயர்ந்த போது, காயத்துக்கு சிகிச்சை பெற்று ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் (120 ரன்கள், 178 பந்துகளில் 18 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து டீன் எல்கர் 81 ரன்னிலும், குயின்டான் டி காக் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிலாண்டர் 33 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து 612 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. ரென்ஷா 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 7 ரன்னிலும், ஜோபர்ன்ஸ் 42 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹேன்ட்ஸ் கோம்ப் 23 ரன்னுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

Next Story