5 ஆண்டுகளில் உள்ளூரில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை பெற 6 நிறுவனங்கள் போட்டி


5 ஆண்டுகளில் உள்ளூரில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை பெற 6 நிறுவனங்கள் போட்டி
x
தினத்தந்தி 2 April 2018 11:15 PM GMT (Updated: 2 April 2018 9:22 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணி மோதும் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடருக்கான டெலிவிஷன் உரிமத்தை பெற 6 நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

புதுடெல்லி,

5 ஆண்டுகளில் உள்ளூரில் இந்திய கிரிக்கெட் அணி மோதும் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடருக்கான டெலிவிஷன் உரிமத்தை பெற 6 நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

இந்த மாதம் (ஏப்ரல்) முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளூரில் இந்திய கிரிக்கெட் அணி மோதும் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடருக்கான டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ‘ஆன்-லைன்’ ஏலம் மூலம் முடிவு செய்கிறது.

இதற்கான ஏலம் மும்பையில் இன்று நடக்கிறது. இதுவரை டெண்டர் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த ஒளிபரப்பு உரிமம், மிகுந்த வெளிப்படை தன்மையுடன் இருக்க ‘ஆன்-லைன்’ மூலம் ஏலம் விட வேண்டும் என்ற நிர்வாக கமிட்டியின் அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த ஆன்-லைன் ஏலம் நடைபெறுகிறது.

ஒளிபரப்பு உரிமம் 3 வகையாக பிரித்து வழங்கப்படுகிறது. சர்வதேச டெலிவிஷன் உரிமம் மற்றும் இந்தியா தவிர்த்து எல்லா நாடுகளுக்கான டிஜிட்டல் உரிமம், இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் உரிமம், சர்வதேச ஒருங்கிணைந்த உரிமம் என்ற 3 பிரிவாக பிரித்து இந்த ஏலம் நடக்கிறது.

2018-19-ம் ஆண்டில் ஒரு போட்டிக்கான குறைந்தபட்ச சர்வதேச டெலிவிஷன் உரிமம் மற்றும் இந்தியா தவிர்த்த எஞ்சிய நாடுகளுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவை ரூ.35 கோடியாகவும், இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் உரிமம் ரூ.8 கோடியாகவும், சர்வதேச ஒருங்கிணைந்த உரிமத்துக்கான தொடக்க கட்டணம் ரூ.43 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019-2023-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு போட்டிக்கான சர்வதேச டெலிவிஷன் உரிமம் மற்றும் இந்தியா தவிர்த்த எஞ்சிய நாடுகளுக்கான டிஜிட்டல் உரிமம் ரூ.33 கோடியாகவும், இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் உரிமம் ரூ.7 கோடியாகவும், சர்வதேச ஒருங்கிணைந்த உரிமம் ரூ.40 கோடியாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட கால கட்டத்தில் இந்திய அணி உள்ளூரில் 22 டெஸ்ட், 42 ஒருநாள் போட்டி மற்றும் 38 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் ஸ்டார், சோனி, ஜியோ, பேஸ்புக், கூகுள் உள்பட 6 நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு போட்டிக்கான குறைந்தபட்ச அடிப்படை விலையாக அதிக தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக ஸ்டார், சோனி நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எல். போட்டிக்கான டெலிவிஷன் உரிமத்தை ஏற்கனவே ஸ்டார் நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story