கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - போராடி டிரா செய்தது நியூசிலாந்து + "||" + Test cricket against England - struggled draw New Zealand

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - போராடி டிரா செய்தது நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - போராடி டிரா செய்தது நியூசிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது.
கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 307 ரன்களும், நியூசிலாந்து 278 ரன்களும் எடுத்தன. 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 382 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று நியூசிலாந்து வீரர்கள் டிரா செய்யும் முனைப்புடன் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

கேப்டன் வில்லியம்சன் (0), ராஸ் டெய்லர் (13 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (13 ரன்), வாட்லிங் (19 ரன்) போன்ற நட்சத்திர வீரர்கள் சோபிக்கவில்லை. தாக்குப்பிடித்து ஆடிய டாம் லாதம் 83 ரன்களிலும் (207 பந்து, 10 பவுண்டரி), கிரான்ட்ஹோம் 45 ரன்களிலும் வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 219 ரன்களுடன் பெரும் சரிவுக்குள்ளானது. அதனால் இங்கிலாந்து வீரர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்தனர். இந்த சூழலில் 8-வது விக்கெட்டுக்கு சோதியும், நீல் வாக்னரும் கைகோர்த்தனர். இருவரும் எதிரணியின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்ஸ்மேனை சுற்றி பீல்டிங் அரண் அமைத்து தாக்குதலை தொடுக்க வைத்தார். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தார். எந்த முயற்சிக்கும் பலன் கிட்டவில்லை.

சோதி- வாக்னர் கூட்டணி 31 ஓவர்கள் சமாளித்து இங்கிலாந்தின் ஆசைக்கு அணை போட்டனர். போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் ஆட்டத்தின் கடைசி பந்தில் நீல் வாக்னர் (7 ரன், 103 பந்து) ஆட்டம் இழந்தார். கடுமையாக போராடிய நியூசிலாந்து அணி 124.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து ஒரு வழியாக ஆட்டத்தை டிரா செய்தது. சோதி 56 ரன்களுடன் (168 பந்து, 9 பவுண்டரி) களத்தில் இருந்தார்.

ஏற்கனவே முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி கண்டிருந்ததால் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து டெஸ்ட் தொடரை வசப்படுத்துவது 1999-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். அதே சமயம் நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்வது 1984-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 13 வெளிநாட்டு டெஸ்டுகளில் வெற்றி பெறவில்லை.

அதிக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இந்த வகையில் வெஸ்ட் இண்டீசின் கார்ட்னி வால்சை (30019 பந்து) முந்திய 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 136 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 30 ஆயிரத்து 74 பந்துகள் வீசியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் அவருக்கு முன்பாக முரளிதரன், வார்னே, கும்பிளே ஆகிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பந்துகள் வீசியிருக்கிறார்கள்.