ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் என்ன?


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் என்ன?
x
தினத்தந்தி 4 April 2018 11:15 PM GMT (Updated: 4 April 2018 7:15 PM GMT)

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்க உள்ளது.

மும்பை,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மல்லுகட்டுகின்றன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்

கேப்டன்: டோனி, பயிற்சியாளர்: ஸ்டீபன் பிளமிங்

இதுவரை பங்கேற்றுள்ள 8 ஐ.பி.எல். தொடர்களிலும் அரைஇறுதியை அதாவது ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சூதாட்ட சர்ச்சையால் 2 ஆண்டு கால தடைக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ளது.

கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் டோனியின் அனுபவமும், சுரேஷ் ரெய்னா, வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, முரளிவிஜய், அம்பத்தி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா என்று வலுவான பேட்டிங் வரிசையும் சென்னை அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சில் 37 வயதான ஹர்பஜன்சிங், 39 வயதான இம்ரான் தாஹிர் ஆகியோரைத் தான் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள 24 வீரர்களில் 11 பேர் 30 வயதை கடந்தவர்கள். இது சென்னை ‘சூப்பர்’ கிங்சா அல்லது சென்னை ‘சீனியர்’ கிங்சா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். ‘ஐ.பி.எல்.-ல் நாங்கள் என்றுமே கிங் தான்’ என்பதை நிரூபிக்கும் உத்வேகத்தில் சென்னை அணி 7-ந்தேதி தனது பயணத்தை தொடங்குகிறது.

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் செயல்பாடு: 2008-2-வது இடம், 2009- அரைஇறுதி, 2010-சாம்பியன், 2011-சாம்பியன், 2012-2-வது இடம், 2013-2-வது இடம், 2014-பிளே-ஆப், 2015-2-வது இடம்.

மும்பை இந்தியன்ஸ்

கேப்டன்: ரோகித் சர்மா, பயிற்சியாளர்: மஹேலா ஜெயவர்த்தனே

மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. இதுவரை 91 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள அந்த அணி இந்த சீசனில், 100 வெற்றிகளை குவித்த முதல் அணி என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகிய ஆல்-ரவுண்டர்கள் அந்த அணியின் தூண்கள் ஆவர். இவர்களோடு கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூன் ரகுமான், மெக்லெனஹான், கம்மின்ஸ் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரதான சுழற்பந்து வீச்சு படை இல்லை. இந்த வகையில் அனுகுல் ராய், அகிலா தனஞ்ஜெயா, மயங்க் மார்கண்டே போன்றோரைத் தான் நம்பி இருக்கிறது. இதே போல் விக்கெட் கீப்பர்களில் இஷான் கிஷன், ஆதித்ய தாரே ஆகியோர் பேட்டிங்கில் சராசரியாகவே இருக்கிறார்கள். இவை எல்லாம் அந்த அணியின் பலவீனமாக கருதப்படுகிறது.

ஐ.பி.எல்.-ல் செயல்பாடு: 2008-லீக் சுற்று, 2009-லீக் சுற்று, 2010-2-வது இடம், 2011-பிளே-ஆப் சுற்று, 2012-பிளே-ஆப் சுற்று, 2013-சாம்பியன், 2014- பிளே-ஆப் சுற்று, 2015- சாம்பியன், 2016- லீக் சுற்று, 2017- சாம்பியன்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

கேப்டன்: விராட் கோலி, பயிற்சியாளர்: டேனியல் வெட்டோரி

கடந்த ஆண்டு 14 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களுரு அணி இந்தமுறை நிச்சயம் எழுச்சி பெறும் வகையில் விளையாடும். தலைச்சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அந்த அணிக்கு இன்னும் ஐ.பி.எல். மகுடம் கிட்டவில்லை. சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் ஓய்வு எடுத்து விட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள கேப்டன் விராட் கோலி, மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டுவதில் கில்லாடியான டிவில்லியர்ஸ், இளம் வீரர் சர்ப்ராஸ் கான், கோரி ஆண்டர்சன், பிரன்டன் மெக்கல்லம், குயின்டான் டி காக் என்று அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. இதே போல் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், மொயீன் அலி என்று சாதுர்யமாக பவுலிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.

சென்ற ஆண்டு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டும் ஒரு சேர ‘கிளிக்’ ஆகாததால் தடுமாற்றம் கண்டது. இந்த முறை அவற்றை திருத்திக் கொண்டால் ஏறுமுகத்தை பார்க்கலாம்.

2008-லீக் சுற்று, 2009-2-வது இடம், 2010-பிளே-ஆப், 2011-2-வது இடம், 2012-லீக் சுற்று, 2013- லீக் சுற்று, 2014- லீக் சுற்று, 2015- பிளே-ஆப் சுற்று, 2016-2-வது இடம், 2017- லீக் சுற்று.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கேப்டன்: தினேஷ் கார்த்திக், பயிற்சியாளர்: காலிஸ்

2 முறை கோப்பையை வென்றுத்தந்த கவுதம் கம்பீரை கழற்றி விட்ட கொல்கத்தா அணி நிர்வாகம் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக்கி இருக்கிறது. கொல்கத்தா அணியின் பலமே சிக்கனமாக பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் தான். தொடக்க வீரராக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் கிளம்பியதால் இங்கு கவனமாக பந்து வீச வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். ஏற்கனவே காயத்தால் மிட்செல் ஸ்டார்க் ‘ஜகா’ வாங்கிய நிலையில், காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு வந்துள்ள அதிரடி சூரர்கள் கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் மறுபடியும் காயமடைந்தால் கொல்கத்தாவுக்கு சிக்கல் தான். கொல்கத்தா அணி ஐ.பி.எல். போட்டியில் 63 சதவீதம் வெற்றியை உள்ளூரில் தான் பெற்றிருக்கிறது. அதில் தான் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜூனியர் உலக கோப்பையில் கலக்கிய சுப்மான் கில், நாகர்கோட்டி, ஷிவம் மாவி உள்ளிட்டோரை, இந்த மின்னல்வேக போட்டியில் சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

2008-லீக் சுற்று, 2009- லீக், 2010- லீக், 2011-பிளே-ஆப் சுற்று, 2012-சாம்பியன், 2013-லீக் சுற்று, 2014-சாம்பியன், 2015-லீக், 2016-பிளே-ஆப், 2017-பிளே ஆப்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கேப்டன்: அஸ்வின், பயிற்சியாளர்: பிராட் ஹாட்ஜ்

பஞ்சாப் அணி தங்களது 11-வது கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நியமித்து இருக்கிறது. இந்த சீசனில் கேப்டன் பதவி வகிக்கும் ஒரே பவுலர் இவர் தான். அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு விலை போன கிறிஸ் கெய்ல், யுவராஜ்சிங் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினால் எதிரணிகள் பஞ்சராகி விடும். ஆனால் பார்ம் இன்றி தவிக்கும் அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கேள்விக்குறி தான். ஆரோன் பிஞ்ச், லோகேஷ் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், ஸ்டோனிஸ், இந்த சீசனில் இந்தியாவின் முதல்தர போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான மயங்க் அகர்வால் என்று பேட்டிங் படையில் தொய்வு இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் இறுதிக்கட்டத்தில் கச்சிதமாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டையை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது.

2008-அரைஇறுதி, 2009-லீக் சுற்று, 2010-லீக், 2011- லீக், 2012-லீக், 2013-லீக், 2014-2-வது இடம், 2015-லீக், 2016-லீக், 2017-லீக்

டெல்லி டேர்டெவில்ஸ்

கேப்டன்: கம்பீர், பயிற்சியாளர்: பாண்டிங்

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (82 தோல்வி), இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். கவுதம் கம்பீர் மீண்டும் சொந்த ஊர் அணிக்கு திரும்பியதுடன், அணியை வழிநடத்தும் கவுரவத்தையும் பெற்றிருக்கிறார். பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் இருப்பது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். இந்த கூட்டணி, டெல்லியை துரத்தும் துரதிர்ஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

20 ஓவர் கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பும் மேக்ஸ்வெல், காலின்முன்ரோ, ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், இந்திய இளம் வீரர்கள் ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டெல்லி அணியின் துருப்பு சீட்டுகளாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் 4 வெளிநாட்டு வீரரை மட்டுமே இறக்க முடியும் என்பதால் முன்னணி பவுலர்கள் ரபடா, டிரென்ட் பவுல்ட் ஆகியோரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் அவதிப்படுவது டெல்லி அணிக்கு கவலைக்குரிய விஷயமாகும்.

2008-அரைஇறுதி, 2009- அரைஇறுதி, 2010-லீக், 2011-லீக், 2012-பிளே-ஆப், 2013-லீக், 2014-லீக், 2015-லீக், 2016-லீக், 2017-லீக்

ஐதராபாத் சன்ரைசர்ஸ்

கேப்டன்: வில்லியம்சன், பயிற்சியாளர்: டாம் மூடி

ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தான் ஐதராபாத் அணியின் ஆணிவேராக இருந்தார். அவரும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக எடுக்கும் ரன்களே அந்த அணியின் வெற்றி வாய்ப்பில் முக்கிய பங்கு வகித்தது. பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.

வார்னருக்கு பதிலாக வில்லியம்சன் ஐதராபாத் அணியின் கேப்டனாக பணியாற்ற உள்ளார். ஆனாலும் பேட்டிங்கில் ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, பிராத்வெய்ட், அலெக்ஸ் ஹாலெஸ், யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசன், சமீபத்தில் கிளப் கிரிக்கெட்டில் 20 பந்துகளில் சதம் நொறுக்கிய விருத்திமான் சஹா ஆகியோரும், துல்லியமான பந்து வீச்சின் மூலம் மிரட்டக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், சுழற்பந்து வீச்சாளர் ரஷித் தான் உள்ளிட்டோரும் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக தெரிகிறார்கள்.

2013-பிளே-ஆப், 2014-லீக், 2015-லீக், 2016-சாம்பியன், 2017- பிளே-ஆப்

ராஜஸ்தான் ராயல்ஸ்

கேப்டன்: ரஹானே, பயிற்சியாளர்: பட்டி உப்டன்

ஸ்டீவன் சுமித் பெற்ற தடை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விழுந்த பெருத்த அடியாகும். அவருக்கு பதிலாக இப்போது ரஹானே கேப்டன் பதவியை அலங்கரிக்கிறார். ரூ.12½ கோடிக்கு ஏலம் போன ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ரூ.11½ கோடிக்கு விலை போன வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், ஜோப்ரா ஆர்ச்சர், பென் லாக்லின், அங்கித் ஷர்மா, தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம் என்று பந்து வீச்சில் ராஜஸ்தான் ஓரளவு வலுவாகவே காணப்படுகிறது. ஆனால் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தவிர பேட்டிங்கில் அனுபவசாலிகள் அதிகம் பேர் இல்லாத குறையை சரி செய்ய வேண்டியதே ராஜஸ்தானுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

2008-சாம்பியன், 2009-லீக் சுற்று, 2010-லீக், 2011-லீக், 2012-லீக், 2013-பிளே-ஆப், 2014-லீக் சுற்று, 2015-பிளே-ஆப்

Next Story