கிரிக்கெட்

எதிரணிகளை பற்றி கவலையில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா + "||" + No worries about the opposition - Mumbai captain Rohit Sharma

எதிரணிகளை பற்றி கவலையில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா

எதிரணிகளை பற்றி கவலையில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா
ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடங்க உள்ள நிலையில் எதிரணிகளை பற்றி கவலையில்லை என மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை,

‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எதிரணிகளை பற்றி கவலை இல்லை, சவாலுக்கு தயாராக இருக்கிறோம்’ என்று மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இதையொட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது ஜெயவர்த்தனே கூறுகையில், ‘ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகள் சில புதிய வீரர்களை தங்கள் அணியில் சேர்த்துள்ளன. அவர்களை பார்க்கவே சிறந்த அணியாக தோன்றுகிறது. இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியம். ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் நாங்களே முன்னணியில் இருப்பதாக கருதவில்லை. அதே சமயம் மற்ற அணிகளை போல நாங்களும் தரமான அணியே. இந்த ஆண்டு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது நடுவர்களின் தவறான முடிவுகளை குறைக்க உதவும். மேலும் இளம் வீரர்களுக்கு வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை எப்படி கையாள்வது என்பதை அறிந்து கொள்வதற்கு இது வாய்ப்பாக அமையும்’ என்றார்.

மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே சிறந்த அணியாகவே விளங்குகிறது. எதிரணிகளை பற்றி எங்களுக்கு கவலையில்லை. கோப்பையை வெல்வதற்கு எது தேவையோ? அது எங்களிடம் இருக்கிறது. சென்னை அணியை சந்திக்க எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். நாங்கள் நடப்பு சாம்பியன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறோம். நடப்பு சாம்பியன் என்பதால் நெருக்கடி இருப்பதாக நினைக்கவில்லை. அது ஒரு கூடுதல் பொறுப்புணர்வு அவ்வளவு தான்.

சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு எப்போதும் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்ற உதவியிருக்கிறார்கள். திறமையான சில சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். அவர்கள் அசத்துவார்கள் என்று நம்புகிறேன். இதே போல் ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார்’ என்றார்.

மேலும் ரோகித் சர்மா கூறுகையில், ‘பேட்டிங்கில் நான் எந்த வரிசையில் இறங்குவேன் என்பதை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறேன். எங்களது மிடில் வரிசை வலுவாக இருக்கிறது. இதே போல் இவின் லீவிஸ், இஷான் கிஷன் போன்ற தொடக்க ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் நான் எந்த வரிசையில் ஆடுகிறேன் என்பதை அறிய காத்திருங்கள்’ என்றார்.

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘முதல் 10 சீசன்களில் எனது சொந்த ஊர் மைதானமாக இருந்தது மும்பை வான்கடே. 10 ஆண்டுகளாக நான் விளையாடிய அணிக்கு எதிராக களம் இறங்குவது நிச்சயம் உணர்வு பூர்வமாக இருக்கும். ஆனால் தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற முறையில் இவற்றை எல்லாம் கடந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மும்பை அணிக்காக நீண்ட காலம் ஆடியிருப்பதால் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது தெரியும். ஆனால் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் ஆடியிருப்பதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை. நிச்சயம் இது மிகப்பெரிய ஆட்டமாக இருக்கும்’ என்றார்.