ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்தது மும்பை: வெற்றியை, சென்னை அணி ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - வெய்ன் பிராவோ


ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்தது மும்பை: வெற்றியை, சென்னை அணி ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - வெய்ன் பிராவோ
x
தினத்தந்தி 8 April 2018 11:15 PM GMT (Updated: 8 April 2018 7:54 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ கூறியுள்ளார்.

மும்பை,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்களுடன் (16.3 ஓவர்) பரிதவித்த போது ‘இனி அவ்வளவு தான்’ என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருப்பர். ஆனால் அந்த சமயத்தில் தனிவீரராக போராடிய ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ அதிரடி காட்டி ஆட்டத்தின் போக்கை தடாலடியாக ளமாற்றினார். 19-வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை பறக்க விட்ட பிராவோ (68 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) அதே ஓவரில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. காயத்தால் வெளியேறி சிகிச்சைக்கு பிறகு மீண்டும் ஆட வந்த கேதர் ஜாதவ் இறுதி ஓவரை எதிர்கொண்டார். ஏதுவான பந்துக்காக காத்திருந்த அவர் முதல் 3 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தை சிக்சருக்கும், 5-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி கடந்த 6 ஆண்டுகளாக தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதில்லை. இந்த முறையும் அவர்களுக்கு அந்த சோகம் தொடருகிறது.

சென்னை அணியின் ஹீரோவாக ஜொலித்த வெய்ன் பிராவோ நிருபர்களுக்கு கூறுகையில், ‘இது எனக்குரிய நாளாக அமைந்தது. இந்த வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் அவர்கள் இப்படியொரு தருணத்துக்காக 2 ஆண்டுகளாக காத்திருந்தனர். எங்கள் எல்லோருக்கும் இதுசிறப்பு வாய்ந்த ஆட்டமாக அமைந்தது. சென்னை அணி நிர்வாகம் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. அதை காப்பாற்றும் வகையில் இந்த சீசனை சிறப்பாக தொடங்குவதற்கு எனது உயரிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை, தங்களது சொந்த ஊரில் நாளை எதிர்கொள்கிறது.

Next Story