கிரிக்கெட்

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL 2018: Rajasthan Royals Beat Delhi Daredevils by 10 Runs (D/L)

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
11-வது ஐபிஎல் போட்டியின் 6வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL #RajasthanRoyals
ஜெய்பூர்,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும். இந்த போட்டி தொடரில் 6-வது லீக் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கம்பீர் தலமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. 

ஜெய்பூரில் உள்ள ஸ்வாமி மன்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணியில் துவக்க வீரரும் கேப்டனுமான ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த ரகானே, நதீம் பந்தில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டு  இருந்த போது, மழை பெய்ய துவங்கியது. இதனால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை சற்று ஓய்ந்ததும் ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸ் தொடர்ந்தது. 

அதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஓவருக்கு 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதிரடி நட்சத்திர ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் மற்றும் கோலின் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோலின் முன்ரோ ரன் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் உடன் கைகோர்த்த மேக்ஸ்வெல் 1 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 17 ரன்களில் லாப்லின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து கிறிஷ் மோரிஷ் களமிறங்க, 4 வது ஓவரின் இறுதிப்பந்தில்  ரிஷாப் பாண்ட் 20 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் டெல்லி அணி 46 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசி 6 பந்துகளில் டெல்லி அணி வெற்றி பெற 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் 14 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதனிடையே நாளை நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.