‘ஓராண்டு தடை என்னை மாற்றிவிட்டது’ - ரஸ்செல்


‘ஓராண்டு தடை என்னை மாற்றிவிட்டது’ - ரஸ்செல்
x
தினத்தந்தி 11 April 2018 8:30 PM GMT (Updated: 11 April 2018 8:12 PM GMT)

ஊக்கமருந்து விதிமுறையை மீறியதாக எனக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. இந்த ஓராண்டு இழப்பு என்னை மாறுபட்ட மனிதராக மாற்றிவிட்டது.

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் 11 சிக்சர்கள் விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 29 வயதான ஆந்த்ரே ரஸ்செல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஊக்கமருந்து விதிமுறையை மீறியதாக எனக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. இந்த ஓராண்டு இழப்பு என்னை மாறுபட்ட மனிதராக மாற்றிவிட்டது. பணிவுடன் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொண்டேன். தொழில்முறை கிரிக்கெட் வீரராக நாம் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்துவது அவசியம். அதிலும் தன்னடக்கம் மிகவும் முக்கியம். மீண்டும் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.

மிகுந்த நம்பிக்கையுடன் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறேன். எனது நம்பிக்கை அளவு இப்போது மிக அதிகமாக உள்ளது. நம்பிக்கை இருந்து விட்டால் எந்த போட்டியிலும் தைரியமாக களம் இறங்கி அசத்தலாம். நான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன். அதற்காக 100 சதவீதம் முழு உடல்தகுதியுடன் உள்ளேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் பந்தை விரட்டும் விதமும், வேகமாக பந்து வீசுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சில ஆட்டங்களுக்கு பிறகு நான் விரும்பும் நிலையை எட்டுவேன் என்று நம்புகிறேன்.

நான் நிறைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். 180 அல்லது 200 ரன்கள் குவித்தும் தோல்வி கண்ட அணிகளை பார்த்து இருக்கிறேன். இந்த பவுலர் நன்றாக பந்து வீசவில்லை, இந்த பவுலர் சரியில்லை என்று குறிப்பிட்டு யாரையும் சொல்லப்போவதில்லை. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

இவ்வாறு ரஸ்செல் கூறினார்.

Next Story