காவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து மாற்றம் புனேயில் நடத்த திட்டம்


காவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து மாற்றம் புனேயில் நடத்த திட்டம்
x
தினத்தந்தி 11 April 2018 9:30 PM GMT (Updated: 11 April 2018 8:28 PM GMT)

காவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை, 

காவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 7 லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னையில் ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐ.பி.எல். ஆட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியை தடுத்து நிறுத்துவதற்காக அரசியல் கட்சியினரும், திரைப்பட துறையினரும், பல்வேறு அமைப்பினரும் ஸ்டேடியம் நோக்கி படையெடுத்தனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதற்குள் போலீசாருக்கு பெரும்பாடாகி விட்டது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து மாற்றம்

இதற்கு மத்தியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சிலர் காலணியை தூக்கி மைதானத்திற்குள் வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையேத்தான் சென்னை அணி கொல்கத்தாவை தோற்கடித்தது. இது தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் உலக கிரிக்கெட் அரங்கில் பரவிவிட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். நிர்வாகமும் கவலைக்குள்ளானது. எஞ்சிய 6 ஆட்டங்களுக்கும் இதே போன்று இடையூறு ஏற்படுத்துவோம் என்று சில அமைப்புகள் எச்சரித்தன.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை நேற்று பிற்பகலில் சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய சூழலில் சென்னையில் நடக்கும் ஆட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம், போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பதே சரியாக இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கினார். இந்த தகவல் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவசரமாக ஆலோசனை நடத்தினர். இதில் தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலை கருத்தில் கொண்டு சென்னையில் நடக்க இருந்த எஞ்சிய 6 ஐ.பி.எல். ஆட்டங்களையும் வேறு இடத்துக்கு மாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

புனேயில்....

விசாகப்பட்டினம் (ஆந்திரா), திருவனந்தபுரம் (கேரளா), புனே (மராட்டியம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒன்றில் தங்கள் அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்களை நடத்திக்கொள்ளும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு கிரிக்கெட் வாரியம் பட்டியலை அனுப்பி வைத்தது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் புனே மைதானத்தில், தங்களது உள்ளூர் ஆட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘சென்னையில் நடக்க இருந்த அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களும் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறது. இங்கிருந்து மாற்றப்படும் ஆட்டங்கள் எந்த நகரில் நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். புனேயில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது’ என்றார். இதற்கிடையே சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அடுத்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை ரத்து செய்யப்பட்டது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘சொந்த ஊர்’ ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டு தடைக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பிய சென்னை அணி, உள்ளூரில் ஆட முடியாத நிலைமை உருவாகி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Next Story