கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி + "||" + Hyderabad won the match by one wicket in IPL

ஐபிஎல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி

ஐபிஎல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி
11 வது ஐபிஎல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.
ஐதராபாத்,

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதரபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி மும்பை  இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா (11 ரன்கள்) ஏமாற்றினார். எவின் லெவிஸ் 29 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷான் (9 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (28 ரன்கள்), பாண்ட்யா (15 ரன்கள்), பொல்லார்டு (28 ரன்கள்), பென் கட்டிங் (9 ரன்கள்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வேகம் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. 

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. ஐதராபாத் அணி தரப்பில் சந்தீப் சர்மா, ஸ்டான்லகே, சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சகா மற்றும் தவான் ஆகியோர் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 6.5 ஓவரில் சகா (22 ரன்கள்) எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அணியின் கேப்டன் வில்லியம்சன் 6 ரன்கள் எடுத்து வெளியேற, தவானும் (45 ரன்கள்) மார்கண்டே பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.இதன் பின்னர் களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் சகிப் அல்ஹசன் ஆகியோர் மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்தி தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 13 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு  107 ரன்கள் எடுத்திருந்தது.

 இதன் பிறகு தீபக் ஹூண்டா வுடன் யூசூஃப் பதான் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல நிதானமான ஆட்டத்தினை வெளிபடுத்தினர். இருப்பினும் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 17 வது ஓவரின் 4 ஆவது மற்றும் 5 வது பந்தில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை (பதான், ரஷீத் கான்) வீழ்த்தி அசத்தினார். அடுத்த ஓவரை வீசிய முஷ்டஃபிஸூர் ரஹ்மான் வெறும் 1 ரன்னை விட்டு கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஹைதராபாத் அணியின் விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்திருந்த ஹைதராபாத் அணிக்கு கடைசி 6 பந்துகளில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. இதனிடையே ஹூண்டாவுடன் இணைந்த ஸ்டான்லேக் இறுதி பந்து வரை வெற்றிக்கு போராடினர்.

கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது ஸ்டான்லேக் பவுண்டரி விளாசி முடித்து வைத்தார். இறுதிவரை வெற்றிக்கு போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...