மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி: 20 ஓவர் முழுமையாக நடந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்


மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி: 20 ஓவர் முழுமையாக நடந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்
x
தினத்தந்தி 12 April 2018 9:00 PM GMT (Updated: 12 April 2018 8:44 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை தோற்கடித்தது.

ஜெய்ப்பூர், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை தோற்கடித்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்திருந்த போது மழை கொட்டியது. இதனால் 2½மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டதால் அத்துடன் ராஜஸ்தானின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டு, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. டெல்லி அணியில் காலின் முன்ரோ (0), மேக்ஸ்வெல் (17 ரன்), ரிஷாப் பான்ட் (20 ரன்), கிறிஸ் மோரிஸ் (17 ரன்) போன்ற அதிரடி சூரர்கள் களம் இறங்கியும் இலக்கை அடைய முடியவில்லை. 6 ஓவர்களில் அந்த அணியால் 4 விக்கெட்டுக்கு 60 ரன்களே எடுக்க முடிந்தது. ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்ற 9–வது வெற்றி இதுவாகும்.

2–வது தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் இது. ஆட்டம் முழுமையாக நடந்தால் அவர்கள் 170 ரன்கள் வரை எடுப்பார்கள், இரவில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் நாம் அதை விரட்டிப்பிடித்து (சேசிங்) விடலாம் என்று நினைத்தேன். ஆனால் மழையால் எல்லாமே மாறி விட்டது. 6 ஓவர்களில் 71 ரன்கள் என்பது கடினமானதே. இவ்வாறான சூழலில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டி இருக்கும். 2 ஓவர் மட்டுமே பவர்–பிளே என்பது இன்னும் கடினமான ஒன்று. 20 ஓவர் முழுமையாக நடந்திருந்தால் ‘சேசிங்’ செய்வது எளிதாக இருந்திருக்கும்’ என்றார்.


Related Tags :
Next Story