கிரிக்கெட்

ஐபிஎல்: பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL 2018: De Villiers, Umesh Star as Bangalore Beat Punjab by Four Wickets

ஐபிஎல்: பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல்: பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. #IPL
பெங்களூரு,

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது. 

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அகர்வால் 15 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஆரோன் ஃபிஞ்ச் டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். இதனிடையே பஞ்சாப் அணியின் ராகுல் (47 ரன்கள்), அஸ்வின் (33 ரன்கள்) மற்றும் கருண் நாயரை (29 ரன்கள்) தவிர அனைத்து வீரர்களுமே பெங்களூரு அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் இந்த ஆட்டத்திலும் வெறும் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணியின் ரன் வேகம் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. 

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.2 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ் மற்றும் சகால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்கியது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெக்குல்லம்,  அக்ஸார் பந்து வீச்சில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து இறங்கிய  கேப்டன் விராட் கோலி (21 ரன்கள்) 4 பவுண்டரிகள் விளாசி முஜீப் பந்தில் போல்ட் ஆனார். அணியின் ஸ்கோர் 33 ஆக இருக்க 2 விக்கெட்டுகளை பெங்களூரு அணி இழந்த நிலையில், க்வின்டன் டி காக்குடன் அதிரடி ஆட்டகாரர் டி வில்லியர்ஸ் கை கோர்த்தார். இருவரும் சேர்ந்து அவ்வப்போது பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்த போது க்வின்டன் டி காக் (45 ரன்கள்) அஸ்வின் சுழல் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சர்ஃபராஷ் கானும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப மன்தீப் சிங், டி வில்லியர்ஸுடன் இணைந்தார்.

 சிறிது நேரம் பொறுமையாக ஆடி கொண்டிருந்த டி வில்லியர்ஸ் 16 வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் தொடர்ந்து இரு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் 18 வது ஓவரின் முதல் பந்தில் டி வில்லியர்ஸ் (57 ரன்கள், 4 சிக்ஸர்கள்) கேட்ச் ஆகி வெளியேற அதே ஓவரில் மன்தீப் சிங்கும் ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில் பெங்களூரு அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியின் வீரர் வாஷிங்டன் சுந்தர் 2 பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். பஞ்சாப் அணியில் கேப்டன் அஸ்வின் அதிக பட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

நாளை நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சொந்த மண்ணில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.